rajinikanth will go to madurai for shooting

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் கபாலி, காலா என்ற மாஸ் படங்களை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணையும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

உதகையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெறும் சம்பவம் போன்று தாயாராகி வரும், பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. உதகையில் படப்பிடிப்பு நடத்தினால், தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், முதற்கட்டப் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் ஆகிய பகுதிகளில் நடத்தப்படுகிறது.

டார்ஜிலிங்கில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஜூலை 10ஆம் தேதி சென்னைக்கு வரும் ரஜினிகாந்த், அடுத்தக்கட்டமாக டேராடூன் பகுதியில் நடைபெறவுள்ள படப்பிடிப்புக்காக, ஜூலை 16ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்படுவார் எனக் கூறப்படுகிறது.



2ஆம் கட்ட படப்பிடிப்புக்குப் பிறகு பாபாஜி குகை, குருசரண் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள ரஜினி, அங்கே சில நாட்கள் ஓய்வு எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு மதுரையில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளராம் ரஜினி. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தின் முக்கிய காட்சிகள் மதுரையை மையமாக கொண்டது என கூறப்படுகிறது. ஏற்கெனவே மதுரையை மையமாக வைத்து இயக்கப்பட்ட ஜிகர்தண்டா பிரமாண்ட வெற்றிபெற்றதால், ரஜினி நடிக்கும் படத்தின் கிளைமாக்சையும் மதுரையிலேயே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.



இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜின் விருப்பமான ஹீரோ விஜய் சேதுபதி, வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டாலும், அது உறுதி செய்யப்படவில்லை. மேலும், கார்த்திக் சுப்பராஜ் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பாபி சிம்ஹாவும், ஜோக்கர் படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் சனந்த் ரெட்டி – மேகா ஆகாஷ் இளம் காதல் ஜோடிகளாக வலம் வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், தன் அதிரடி இசையால், இளைஞர்களை தொடர்ந்து அசத்தி வரும் அனிருத்-தும் இந்த படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.