சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான சொத்து வரி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதையடுத்து ரூ.6.50 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டி உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் ராகவேந்திரா மண்டபத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், மார்ச் 24 ம் தேதி முதல் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் எந்த வருமானமும் இல்லை எனவே சொத்து வரி கேட்டு நிர்பந்திக்ககூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா, நோட்டீஸ் அனுப்பப்பட்டு 10 நாட்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள்... ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள். அத்துடன் இதற்கு மேலும் இப்படி நடந்து கொண்டால் அபராதம் விதிக்க நேரிடும் என்றும்  எச்சரிக்கை விடுத்தார்.  இதனையடுத்து ரஜினிகாந்த் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ரஜினிகாந்த் தரப்பு மனுவை திரும்ப பெறுவதாக ஒப்புக்கொண்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: இது உடலா? உடையா?... உடலை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய உடையில் ரைசாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்.....

சொத்து வரி கட்டுவது தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. கட்சி தொடங்க உள்ள ரஜினிகாந்த் 6.50 லட்சம் ரூபாய் வரியை கட்டாமல் வழக்கு தொடரலாமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம் என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டுள்ளார்.