அட்ரா சக்க... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்! 'ஜெயிலர்' டிரைலர் ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள, 'ஜெயிலர்' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவலை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' போன்ற படங்களை இயக்கி, மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமான இயக்குனர் நெல்சன் திலீப் குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தாலும், மிக முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் ரஜினிக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்கு பின்னர், நடிகை ரம்யா கிருஷ்ணா நடித்துள்ளார். அதை போல் தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கிய இந்த திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. எனவே இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வார்த்தைகள் மிகவும் கவனிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை சன் டிவி தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. "லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்... காத்திருப்பு முடிந்தது... வருவதற்கான நேரம் வந்துவிட்டது.. என டிரைலர் ரிலீஸ் குறித்த தகவலை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தாலும், தற்போது வரை வெளியாகும் நேரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே இது குறித்த நாளை படக்குழு அறிவிக்கும் என தெரிகிறது.