'சன் பிக்‌ஷர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வந்த ‘பேட்ட’படப்பிடிப்பு முடிந்து பேக் அப் ஆனது. இந்த செய்தியை மிக உற்சாகமாக ட்விட் பண்ணியுள்ளார் ரஜினி. ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன்,இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் சசிக்குமார், ஷாநவாசுதீன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்றது. 

கடந்த வாரம் ரஜினி மதுரைக்கார இளைஞராக தோன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த இளமையான தோற்றத்தில் வருகிறார். இது தொடர்பான காட்சிகள் காசி மற்றும் காசியை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ரஜினி சண்டையிடுவது போன்ற காட்சியும் விஜய்சேதுபதி ஆயுதங்களுடன் ஓடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது. 

கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இறுதி ஷெட்யூல் சுமார் 30 நாட்களுக்கு திட்டமிடப்பட்டு, ரஜினி உட்பட அனைவரும் தீபாவளிக்குத்தான் சென்னை திரும்புவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் முக்கிய பாத்திரங்களில் நடித்த அனைவருமே சிங்கிள் டேக் ஆர்டிஸ்டுகள் என்பதால் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டதை விட மிகத்துரிதமாகவே முடிந்தது. இதயும் தனது ட்விட்டில் தெரிவித்துள்ள ரஜினி நேற்று இரவு சென்னை திரும்பினார்.