ரஜினி மக்கள் மன்றம் அறிவிக்கப்பட்ட பிறகு கம்பம் நகரில் முதல் முறையாக நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. 

ரஜினி மக்கள் மன்றத்தின் தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில் திரளான பொதுமக்கள், மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இயக்குநரும் நடிகருமான ஈ ராமதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் 150 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தையல் எந்திரங்கள், சலவைப் பெட்டிகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அடுக்குப் பாத்திரங்கள், ஊனமுற்றோருக்கான சைக்கிள்கள், மாணவ மாணவிகளுக்கு எழுதுப் பொருட்கள், நோட்டுகள், தேனி மாவட்டத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை மன்ற நிர்வாகிகளை வைத்து வழங்கச் செய்தார் ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஸ்டாலின் பேசுகையில், "பணம், பதவி எதையும் எதிர்ப்பார்த்து நான் ரஜினிக்கு ரசிகனாகவில்லை. எல்லோரும் அடுத்தவரிடம் வசூலித்து நலத்திட்ட உதவிகள் செய்வார்கள். நான் என் பணத்தை எடுத்துதான் செலவு செய்துள்ளேன். அது ரஜினியிடம் கற்றுதுதான். நான் இன்னும் ரஜினியைச் சந்திக்கக் கூட இல்லை. அவரது கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் செய்யவில்லை. முப்பது ஆண்டுகளாகவே நான் இப்படித்தான். 

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை ரஜினி மன்றத்தினர் நல்ல கட்டமைப்பில் இருக்கிறார்கள். தேர்தலின்போது மற்ற கட்சிகளை விட வலுவான போட்டியாளர்களாக ரஜினி மக்கள் மன்றத்தினர் இருப்பார்கள்," என்றார்.   

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட செயலாளர் ஜெய்புஷ்பராஜ், மாவட்ட இணை செயலாளர் பொன் சிவா, கம்பம் நகர செயலாளர் செந்தில், இணை செயலாளர் சரவணன் மற்றும் மற்றும் நகர நிர்வாகிகள் விழாவை சிறப்பாக நடத்தினர் 
விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ரஜினி இப்ராகிம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.