இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'வரலாறு' படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த தகவலை முதல் முறையாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். 

தல அஜித் நடித்திருந்த இந்தப் படத்தை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்திருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசின், கனிகா ஆகியோர் நடித்திருந்தனர். அஜீத் மூன்று வேடங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, நடிகர் அஜித்தின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக, 'வரலாறு' படத்தில் தலைவர் ரஜினிகாந்த் நடிக்க இருந்ததாகவும், அவர் வேறு சில படங்களில் பிஸியாகி விட்டதால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

மேலும் இப்படம் குறித்து அவர் கூறுகையில் முதலில் 'வரலாறு' படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் தான் கூறியதாகவும், அவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்து போனதால், இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஜக்குபாய் படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருசில காரணத்தால் நிறுத்தப்பட்டது. எனவே 'சந்திரமுகி' படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

நான் இப்படத்தின் கதையை அஜித் மற்றும் தயாரிப்பாளரிடம் கூற இருவருக்கும் கதை பிடித்துப் போனதால் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பின் இந்தப் படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றபின் ரஜினி ஒருமுறை 'வரலாறு' படம் பற்றி கேட்டதாகவும் கூறியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.

ரஜினிகாந்த் மிஸ் செய்த கதையில், சூப்பராக நடித்து அஜித் வெற்றியை தக்க வைத்த படம் குறித்த இந்த தகவல் பல ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.