டிசம்பர் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய உடல் நிலை காரணமாக கட்சி துவங்க வில்லை என்பதை அதிகார பூர்வமாக அறிவித்தார். 

தலைவர் அரசியலுக்கு வந்தால், ஆன்மீக அரசியல் மலரும், பல்வேறு மாற்றங்களும், அதிசயங்களும் நிகழும் என காத்திருந்த பல்லாயிர கணக்கான ரசிகர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. இந்நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பலமுறை தலைவர் அரசியல் பற்றி பேசிவிட்டு அமைதியாக இருந்தாலும், இம்முறை சட்டமன்ற தேர்தலை கண்டிப்பாக கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவார் என ரசிகர்கள் நினைத்தனர்.  ஆனால் திடீர் என தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என, மூன்று பக்க அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் ரஜினிகாந்த். 

இவரது முடிவுக்கு பிரபலங்கள், மற்றும் சில ரசிகர்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் இந்த முடிவுக்கு தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்து, ரஜினிகாந்த் வீட்டின் முன்பே போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ரஜினிகாந்த் வீட்டின் முன்பே ரசிகர் ஒருவர் தீ குளிக்கவும் முயன்றார்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..." நம் மக்கள் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 20.01.2020 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட பகுதி, வட்ட பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்துகொள்ள கூடாது மீறி கலந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.