ரஜினியோடு பல படங்கள் பணிபுரிந்த இயக்குநர்கள், நடிகர் நடிகைகளில் துவங்கி, ஒரேயொரு படம் மட்டுமே பணிபுரிந்த லைட் பாய் வரைக்கும் எழுத்து பிசகாமல் சொல்லும் வாசகம்...’அவரு ரொம்ப எளிமையான மனிதர். சூப்பர் ஸ்டார் அப்படிங்கிற தலைகனமே கிடையாது. எல்லார்ட்டயும் பாரபட்சமில்லாம ஒரே மாதிரி பழகுவார்’ என்பதுதான். இன்று நேற்றல்ல பல வருடங்களாக இப்படியான ஸ்டேட்மெண்டுகள்தான் ரஜினியை பற்றி வந்து கொண்டிருக்கின்றன. 

ஆனால் அதேவேளையில் ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற நிர்வாகிகளாகட்டும், அவரது மக்கள் மன்ற நிர்வாகிகளாகட்டும், இரண்டையும் சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளாகட்டும் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள் அல்லது ராஜினாமா செய்கிறார்கள்! ஏன் இந்த நிலை? அப்படியானால்...ரஜினியின் அலுவலகத்தில் அவரது நிர்வாகியாக காலம் தள்ள முடியாதா? எனும் கேள்வி பெரியளவில் எழுந்து நிற்கிறது. 

ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகியாக நெடும் காலம் இருந்த சத்தியநாராயணா சில வருடங்களுக்கு முன் அதிலிருந்து விலகினார். ரஜினியின் நிழலாக, அவரது உடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டவர் இந்த் சத்தியநாராயணா. அவர் விலகிய பின் இப்போதிருக்கும் சுதாகர் வந்தார். ஆனால் சத்தியநாராயணா அளவுக்கு இவர் ஜனரஞ்சக அந்தஸ்தை பெறவில்லை. ரசிகர்களிடம் நட்பாக பேசாமல், பெரிய மனிதராக கண்டிப்பு காட்டியதால் குழப்பங்கள் வெடித்தன. அவரோ ‘நான் ரஜினி பேச்சை கேட்பதா? ரசிகர்கள் பேச்சை கேட்பதா?’ என்றார். சில சமயங்களில் அவர் டம்மியாக்கப்படுவதும் பின் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதும் தொடர்கிறது. 

இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்த ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டார். இவர் வந்த பின் மீண்டும் சுதாகர் டம்மியாக்கப்பட்டு, ராஜூவின் கைப்பிள்ளை ஆக்கப்பட்டார். இவரது கார்ப்பரேட் ஸ்டைல் நடவடிக்கையை ரசிகர்களோ, மக்கள் மன்றத்தினரோ விரும்பவில்லை. உரசல் உச்சம் தொட, ராஜூ பதவியை விட்டு விலகினார். வெளியேறும்போது ‘என்றும் ரஜினி சாரின் சகோதரன், நண்பன். அவருக்கான எந்த உதவியும் செய்ய தயார்.’ என்று மூட்டையை கட்டினார். 

இதன் பின் டாக்டர் இளவரசன் வந்தார். அமைப்புச்செயலாளர் ஆக்கப்பட்டார். இவரோடு தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஸ்டாலினும் வந்தார். இருவரும் சேர்ந்து தடாலடியாக மக்கள் மன்றத்தை நகர்தினர். அதிரடியாக நிர்வாகிகளை பதவிகளில் இருந்து தூக்கி வீசினர். ‘முப்பது வருஷம் ரசிகர் மன்றத்தில் இருந்ததெல்லாம்  மக்கள் மன்ற மற்றும் கட்சியில் பதவி பெற தகுதி ஆகாது! பணம் இருப்பவர்களால்தான் தேர்தலில் களமிறங்கி எதிர்கொள்ள முடியும்.’ என்று ரஜினியை விட பெரிய பஞ்ச் டயலாக்குகளை பேசி அலறவிட்டார் இளவரசன். அவரும் சமீபத்தில் ராஜினாமா செய்துவிட்டார். 

இளவரசனும், ஸ்டாலினும் ஒன்றாக செயல்பட்டபோது சுதாகர் டம்மியாகவே இருந்தார். இப்போது ஸ்டாலினுக்கும் சுதாகருக்கும் நடுவில் பவர் ரேஸ் பட்டொளி வீசி பறக்கிறது. கூடிய விரைவில் ஸ்டாலினும் கிளம்பிவிடுவார் என்று தகவல். ஆக ரஜினியின் மன்ற நிர்வாகத்தில் ஏன் யாராலும் நிலைத்து நிற்க முடியவில்லை? அப்படியானால்... ‘ரஜினியுடன் காலம் தள்ளுவது அவ்வளவு கஷ்டமா?’ என்று கேட்டால்...“நிச்சயமாக இல்லை. அவர் மீது எந்த தவறுமில்லை. சர்வாதிகாரியான ஓனராகவெல்லாம் நடக்க மாட்டார். 

முழு சுதந்திரம் கொடுப்பார். ஆனால் அவருக்கு நேர் கீழே உள்ள பதவியில் வந்து உட்காருபவர்கள் தங்களை இன்னொரு ரஜினியாகவே நினைத்துக் கொண்டு ரசிகர்களை, மன்றத்தினரை, கீழ் நிர்வாகிகளை உருட்டுவது மிரட்டுவது என்று ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த முக்கிய நபர்கள் மட்டுமில்லாமல் வெளியே தெரியாத சில நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர். காரணம் அவர்கள் ரஜினி பணத்தில் கை வைத்ததுதான். இந்த நபர்களின் செய்கையால் ரஜினிக்கும், ரசிகர்களுக்கும் இடையில் பிளவும் மனக்கசப்பும் உருவாகிறது. துவக்கத்தில் இதை பெரிதாய் எடுத்துக்காமல், ரசிகர்கள் மேலேயே தப்பு சொல்வதும் பிறகு உண்மையை அறிந்து நிர்வாகி மேல் பாய்வதுமே ரஜினியின் வழக்கமாகிவிட்டது. ‘யாரை நம்பி நிர்வாகத்தை கொடுத்தாலும் எனக்கு துரோகம் பண்றாங்க.’ என்று தொடர்ந்து புலம்புகிறார்.