தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் விளங்கிய கலைஞானத்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் ரூ.1 கோடியில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் என்றால் நேர்மை… ரஜினிகாந்த் என்றால் வாக்குத் தவறாமை… ரஜினிகாந்த் என்றால் எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்… இதை திரையுலகில் மட்டுமல்ல, பொதுவாகவே யாரிடம் சொன்னாலும் தயங்காமல் ஒப்புக் கொள்வார்கள்.

‘கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திருப்பி வாங்கின பழக்கமே இல்லை’ என்பது ரஜினி சினிமாவுக்குப் பேசிய வசனம் மட்டுமல்ல… அவரது வாழ்க்கையே அதுதான். சில நாட்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர் கலைஞானத்துக்கு நடந்த பாராட்டு விழாவில், அவர் இன்னமும் வாடகை வீட்டில் வசிப்பதாக சொன்ன நடிகர் சிவகுமார், அரசு சார்பில் கலைஞானத்துக்கு வீடு ஒதுக்குமாறு கேட்டார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த  ரஜினிகாந்த், அரசுக்கு அந்த வாய்ப்பைத் தர மாட்டேன். கலைஞானம் தன் கடைசி காலம் வரை என் வீட்டில்தான் இருக்க வேண்டும். சீக்கிரம் அவருக்கு ஒரு வீடு பாருங்கள்.. அடுத்த 10 நாட்களில் வாங்கித் தருகிறேன் என சொன்னார்.

ரஜினி சொன்னதைத் தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா கலைஞானத்துக்காக  ரூ 1 கோடி மதிப்பிலான ஒரு வீட்டை பார்த்துள்ளார். அந்த வீட்டை முழுமையாக தனது செலவில் வாங்கி கலைஞானத்துக்கு ரஜினிகாந்த் அளித்துள்ளார்.

கலைஞானம் சொல்வதைப்போல ரஜினி என்பவர் அவருக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை… முதல் முதலில் ஹீரோ வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படம் வெற்றி. அவரும் சம்பாதித்துவிட்டார். அதன் பிறகு ரஜினியை வைத்து அவர் படம் பண்ணவே இல்லை. ஆனாலும் ரஜினி நடித்து பெரிய வசூலை வாரிக் குவித்த பெற்ற அருணாச்சலம் படத்தின் தன் லாபத்தில் ஒரு பங்கை கலைஞானத்துக்கு அளித்து அவரது வாழ்வை சரிவிலிருந்து மீட்டார்.

அந்த படத்தில் வந்த லாபத்தை நலிவடைந்த 7 சினிமா பிரபலங்களுக்கு பிரித்து அளித்தார். அப்போது அந்தத் தொகையை வைத்து கலைஞானம் தனது கடன்களை அடைத்துவிட்டு, சொந்த வீட்டையும் மீட்டார். ஆனால் பின்னர் அனைத்தையும் இழந்து வாடகை வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் ரஜினி, கலைஞானம் வாழ்நாளில் மறக்க முடியாத உதவியை மீண்டும் செய்திருக்கிறார்.