rajinikanth force to ameerkhan in 2.0 movie

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கானை கதாநாயகனாக நடிக்கும் படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வற்புறுத்தியதாக தற்போது அமீர்கானே கூறியுள்ளார்.

இது குறித்து அமீர் கான் மேலும் கூறிய போது, “இயக்குனர் ஷங்கர் முதலில் 2.0 படத்தில் நடிக்க என்னைத்தான் அணுகினார். அவரிடம் நான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்.

காரணம் நான் எந்திரன் படத்தை பார்த்திருக்கிறேன், அந்தக் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் சாரைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. இந்தப் படத்தில் அவர் மட்டும் தான் நடிக்க முடியும்; அது தான் நன்றாகவும் இருக்கும் எனக் கூறி இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்ற கடினமான முடிவை நான் எடுத்தேன்.

இதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே எனக்கு போன் செய்து நீங்கள் இந்தப் படத்தில் நடித்தால் படம் அருமையாக வரும் என்று நம்புவதாகவும், தனக்கு சற்று உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் இந்தப் படத்தில் நடிக்க முடியுமா? எனத் தெரியவில்லை என்று சந்தேகத்துடன் பேசினார்.

நான் அவருக்கு ஊக்கம் கொடுக்கும் விதத்தில் இந்தப் படத்தை உங்களைத் தவிர யாராலும் செய்ய முடியாது. உங்களால் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை உங்களுடைய ரசிகனான எனக்கு இருக்கிறது; இந்தப் படத்தில் உங்களைப் போல் என்னால் நடிக்க முடியாது” என்று கூறி, அவர் தன்னை வற்புறுத்திய போதும் 2.0 படத்தின் வாய்ப்பை மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.