ரஜினிகாந்த் தனது இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு ஏக பிரம்மாண்டமாக நடத்திய மறுமணம் மிக மிக முற்போக்கு நிகழ்வாக வர்ணிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்களும் ரஜினி மற்றும் அவரது சம்பந்தி குடும்பங்கள் மட்டுமில்லாமல் இணையதளத்தில் பல லட்சம் பேர் இந்த திருமணத்தைக் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். 

அதிலும் மெஹந்தி நிகழ்வின் போது தன் கையில் இடப்பட்டிருந்த மருதாணியின் அழகை தன் மகன் வேத்-இடம் செளந்தர்யா காட்டும் புகைப்படமும், அதே நாளில் தன் அப்பாவின் தோளில் செளந்தர்யா நெகிழ்வாக சாய்ந்து நிற்கும் புகைப்படமும், ரிசப்ஷன் வேளையில் செளந்தர்யா- விசாகனின் ஸ்டைலிஸ் புகைப்படங்களும் பெரிய வைரலாகின. 

தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள், கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் என்று எல்லோரும் படை திரண்டு வந்து இந்த (மறு) திருமணத்தை வாழ்த்தியது பெரும் கலகலப்பாக பேசப்பட்டது. எப்போதும் ஒரு விஷயம் மிக வெற்றிகரமாக நடந்து முடிகையில் திருஷ்டி பொட்டாக ஒரு சம்பவம் நிகழுமில்லையா? அப்படியொன்று நடந்துள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. 

அது என்ன?... அதாவது, இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி சொல்லி ரஜினி எழுதிய கடிதம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதைப் பார்த்துதான் ரஜினிகாந்தின் சம்பந்தி குடும்பத்தினர் மன அதிருப்தி கொண்டதாகவும், ரஜினி மீது சங்கடப்பட்டதாகவும் தகல்வல்கள் தடதடக்கின்றன. அப்படி என்னவாம் அந்த மடலில்?  அந்த கடிதத்தை துவக்கியிருக்கும் ரஜினிகாந்த் ‘என் மகள் செளந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய....’ என்று துவங்கியிருக்கிறார். 

மகள் செளந்தர்யா என்று குறிப்பிட்டவர், மருமகன் விசாகன்! என்றுதானே குறிப்பிட்டிருக்க வேண்டும்!? ஏன் மணமகன்! என்கிறார்? திருமணம் முடியும் வரைதான் மணமகன், தாலி கட்டிய பின் ரஜினி - லதா தம்பதியருக்கு விசாகன் மருமகன் ஆகிவிட்டாரே அப்புறம் ஏன் இப்படி தள்ளி வைத்து குறிப்பிட வேண்டும்? மணமகள் என்றா குறிப்பிட்டார்? மகள்! என்று தானே குறிப்பிட்டுள்ளார் செளந்தர்யாவை, அப்படியானால் விசாகனை அதே உரிமையோடு அழைக்காமல் விட்டது ஏன்? என்று  விசாகனின் குடும்பத்தை சேர்ந்த சில சீனியர்கள் விசனப்பட்டுவிட்டார்கள் என்று தகவல் பரவுகிறது. 

 

ஆனால் விசாகன் குடும்பத்தினரோ ‘ஏன் கண்ணாடி வீட்டு மேலே கல்லெறியுறாங்க. அப்படியெல்லாம் நாங்க நினைக்கவேயில்லை. ரஜினி சார் எங்க வீட்டு பையனை ஏத்துக்கிட்டது, அவனை மணமகனாக்கியதுமே பெருமை. வீணாக திருஷ்டி சுத்தாதீர்கள், நாங்க ஏற்கனவே பூசணிக்காய் உடைச்சுட்டோம்.” என்கிறார்கள். அதேபோல் முதல்வர், துணை முதல்வர் இவர்களையெல்லாம் பதவியை மட்டுமே குறிப்பிட்டிருக்கும் ரஜினி, ஸ்டாலின் கமல் , முகேஷ் அம்பானி, திருநாவிக்கரசர், அமர்நாத் என ஒரு சிலரை மட்டும் பெயரைக் குறிப்பிட்டு நன்றி சொல்லியுள்ளது அ.தி.மு.க.வினரை கடுப்பாக்கி ‘பாரபட்ச நடவடிக்கை’ என்று சொல்ல வைத்துள்ளது. 

அதேபோல் இந்த திருமணத்துக்கு அழையா விருந்தாளிகளாக வந்து, பவுன்சர்களால் தடுக்கப்பட்டு, ரோட்டில் நின்று மனசார அட்சதை தூவிய தன் ரசிகர்களையும் மறந்தும் கூட ரஜினி குறிப்பிடாததும் வருத்தமாக்கியுள்ளது ரசிகர்களை. ‘முதல் திருமணத்துக்கே சொன்ன மாதிரி எங்களை கூப்பிட்டு சாப்பாடு போடலை, இதுக்கு கூப்பிடுவார்னு நாங்க நம்பலை. அட அது போகட்டும், நன்றி கடிதத்திலாவது எங்களை சொல்லியிருக்கலாம்! விடுங்க, இதுதானே சூப்பர் ஸ்டார் ரஜினி!’ என்கிறார்கள். இதுதானா சூப்பர் ஸ்டார் ரஜினி?