டிசம்பர் 12- என்பது வருடத்தில் ஒரு நாள் அல்ல! கர்நாடகாவில் இருந்து திரைத்துறையில் வாய்ப்பு தேடி தமிழகத்துக்கு வந்த சிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தெறி இளைஞர், பெரும் போராட்டத்துக்குப் பின் ‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்’ ஆக முத்திரை பதித்த பின், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12 என்பது இந்தியாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு நாளாகிவிட்டதுதான். இந்த ஸ்டேட்மெண்ட் நம்மில் பலருக்கு இனிக்கலாம், பலருக்கு கசக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. 

இந்த நாள் வந்தால் அவரது கடைக்கோடி ரசிகனில் துவங்கி நாட்டின் பிரதமர் வரை அவரை வாழ்த்துவது வழக்கமாகிவிட்டது. முன்பெல்லாம் ரஜினிக்கான வாழ்த்தை போஸ்டர் ஒட்டியும், பெரும் பேனர் கட்டியும், மெகா சைஸில் சுவர் விளம்பரம் செய்தும் அவரது ரசிகர்கள் வெளிப்படுத்துவார்கள். இன்றும் அது தொடர்கிறது என்றாலும் கூட, ரஜினியின் ட்விட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்துவோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாகி இருக்கிறது. அதிலும் பல தள முக்கியஸ்தர்கள் அதை தரமாக செய்கிறார்கள், அதற்கு ரஜினியின் அகம் மகிழ்ந்த பதில்கள் ஹிட்டடிக்கின்றன. 

தனக்கு ட்விட்டரில் வாழ்த்து செய்தி அனுப்பிய முக்கியஸ்தர்களுக்கு ரஜினி நன்றி தெரிவித்திருக்கும் லிஸ்டில் ஹைலைட்ஸ் இதோ... 

”HBDதலைவா. உங்களது ஆரோக்கியத்துக்கும், சந்தோஷத்துக்கும் எனது சிறப்பான வாழ்த்துக்கள். தன்னடக்கம் மற்றும் ஸ்டைலுக்கான அடையாளமே நீங்கள்தான்.” என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வாழ்த்தியதற்கு... “தேங்க்யூ முருகதாஸ்” என்று பதில் அளித்துள்லார். 

“நான் இணைந்து நடித்தவர்களில் கனவு போன்றவர், நல்ல விஷயங்களின் வரலாறு நீங்கள். எளிமைத்தன்மையின் உச்சவடிவமான உங்களுடன் இணைந்து நடித்ததில் மிக முழுமையான மரியாதை பெற்றவனாகியிருக்கிறேன்.” என்று பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார் வாழ்த்த்தியதற்கு... “தேங்க்யூ ஸோ மச் டியரஸ்ட் அக்‌ஷய்” என்று சொல்லி வணக்கம் எமோஜியும் பதிவிட்டுள்ளார். 

“இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பர் சூப்பர்ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.” என்று வாழ்த்தியிருக்கும் மத்தியமைச்சர் பொன்னாருக்கு... “நன்றி பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே” என்று கூறியுள்ளார். 

“மனிதநேயர், பண்பாளர், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எனது ஆருயிர் நண்பர்...” என்று பெரிதாய் வாழ்த்தியிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு... “நன்றி திருநாவுக்கரசர் அவர்களே!” என்று நன்றி தெரிவித்துள்ளார். 

“ஹேப்பி பர்த்டே சூப்பர் ஒன்” என்று எந்திரன் சிட்டி கெட் அப்பை டிஸைன் செய்து, அதன் கையில் நீள நிற பலூன் ஒன்றையும் கொடுத்து ரஜினியை மீசையில்லா குழந்தையாக்கி ட்விட்டரை தெறிக்க விட்டிருக்கும் இயக்குநர் ஷங்கருக்கு... “தேங்க்யூ ஸோ மச் டியரஸ்ட் சங்கர் சார்” என்று பணிவாய் நன்றி தெரிவித்துள்ளார்.

“ஹேப்பி பர்த்டே ரஜினிகாந்த்.” என்று வாழ்த்தியுள்ள மோகன்லாலுக்கு... “தேங்க்ஸ் மோகன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று பதிலன்பு காட்டியுள்ளார். 

“டிசம்பர் 12- நண்பர், சக நடிகர் மற்றும் எப்போதும் நிலைத்திருக்கும் சென்சேஷன் ரஜினிக்கு வாழ்த்துக்கள்.” என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாழ்த்தியிருக்கும் அமிதாப்பச்சனுக்கு... “மரியாதைக்குரிய அமித்ஜி, நீங்கள்தான் என்னுடையை இன்ஸ்பிரேஷன். உங்களின் ஆசீர்வாதத்துக்கு நன்றிகள்.” என்று பவ்யமாய் பதிவிட்டுள்ளார். 

“என் பல ஆண்டு நண்பர். சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்.” என்று நெடிதாய் வாழ்த்தியிருக்கும் கமல்ஹாசனுக்கு... “நன்றி கமல்” என்று சிம்பிளாய் பதில் புன்னகை காட்டியுள்ளார். 

“திரையுலக சூப்பர்ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியிருக்கும் ஸ்டாலினுக்கு... “வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தளபதி அவர்களே! உங்கள் நண்பன் ரஜினிகாந்த்” என்று தெறியாய் நன்றி காட்டியுள்ளார். இப்படியாக தொடர்கின்றன ரஜினிக்கு பெரும் ஆளுமைகளின் வாழ்த்துக்களும், பதிலும் இந்த சூப்பர்ஸ்டாரின் நன்றிகளும். ஆஸம் னா!