தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், ‘எடப்பாடி  ஆண்டாலும் ஸ்டாலின் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே’ என்று ஹாய்யாக சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னையில் நடந்த ஐ.பி.எல்.மேட்சை ரசித்தது மிகுந்த கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுக்குத் தான் வழக்கம்போல பல்டி அடித்தார். அட்லீஸ்ட் இடைத்தேர்தலுக்காவது லேசாக எட்டிப்பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட ரஜினி அதற்கும் பெப்பே காட்டி விட்டு வீட்டில் ஓய்வெடுத்துவந்தார். அடுத்த இரு வாரங்களில் மும்பையில் துவங்கவிருக்கும் முருகதாஸின் படப்பிடிப்புக்கு ரஜினி செல்லவிருக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் அதற்கும் தேர்தல் ரூபத்தில் ஒரு சின்ன சிக்கல் வந்தது. அதாவது தேர்தல் நடப்பதால் படப்பிடிப்புக்குத் தேவையான பெரிய தொகையை புழங்குவதில் உள்ள சிக்கல்.

இந்நிலையில் நேற்று என்ன மனநிலையில் இருந்தாரோ திடீரென சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த  ஐ.பி.எல். மேட்சைக் காண ஆர்வமாக வந்திருந்தார் ரஜினி. அவர் மேட்ச்  பார்த்த படங்கள் இன்று காலை வலைதளங்களில் வைரலாகவே, ஏற்கனவே ரஜினி தேர்தலை விட்டு ஒதுங்கியதால் மனம் வெறுத்திருந்த ரசிகர்கள், ‘நேத்து அரசியலுக்கு வந்த கமல் கூட கலக்கிட்டிருக்கார். எங்களை சும்மா உட்கார வச்சுட்டு நீ மட்டும் நல்லா மேட்ச் பாத்துட்டு நல்லாரு தலைவா’ என்று தொடங்கி எக்கச்சக்கமாய்ப் புலம்பித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.