சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யாவும், அவரது கணவர் விசாகனும் பாஸ்போர்ட் இன்றி பயணம் செய்ததால் விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு உள்ளாகி ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரஜினி வட்டாரத்தை இச்செய்தி பரபரப்பாக்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. முதல் திருமணம் விவாகரத்து ஆன பின், கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவருக்கும் சவுந்தர்யாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது. ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டிய  விசாகனுக்கு வெளிநாடுகளிலும் தொழில்கள் இருக்கின்றன. அவற்றை கவனிக்க அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவார். சவுந்தர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவும் விசாகனும் லண்டன் நகரத்துக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தனர். பிசினஸ் கிளாஸ் வகுப்பில் இருவருக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டு பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்தது. அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

விமானத்தில் இருந்து விசாகன், தன் மனைவி சவுந்தர்யாவுடன் இறங்கி விமான நிலையத்துக்குள் வந்தார். எமிரேட்ஸ் சேவை மையத்தில் பாஸ்போர்ட் அடங்கிய பையை விசாகன் எடுக்க முயன்றபோது, பாஸ்போர்ட் இருந்த பிரீப் கேஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர்கள் விமானத்தில் தேடினார்கள். விமானத்தில் அந்த பை இல்லை.பாஸ்போர்ட்டுடன் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலரும் அந்தப் பையில் இருந்தது. பாஸ்போர்ட் இல்லாமல் விமான நிலையத்தை விட்டு விசாகன்-சவுந்தர்யா இருவரும் வெளியேற முடியாததால் விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்களும் புகாரை பதிவு செய்துகொண்டு விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் இருவரையும் தங்க வைத்தனர். இந்த தகவல் உடனடியாக இந்திய தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. விசாகனின் ப்ரீப் கேஸைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.