ரஜினியும் , கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பதினாறு வயதும் பதராகும் பொழுதும் என்கிற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியாகி இருக்கிறது.

கமலும் ரஜினியும் இணைந்து செயல்பட்டால் கமல்தான் முதலமைச்சர் என்று கமலின் பழைய காதாநாயகி ஸ்ரீபிரியா முன்னறிவிப்பு செய்திருக்கிறார். இன்னும் என்னென்ன நகைச்சுவைகளை நாடு காணப்போகிறதோ?எப்படியோ காமெடியனாகிப்போன கமல், ரஜினியில் கதாநாயகன் பீடத்தை தகர்த்தெறிந்து அவரையும் தனக்கு  சமமாக்க உகந்த நேரம் பார்த்திருக்கும் வேளையில், அந்த வாய்ப்பை ரஜினியே வலியச்சென்று கமலுக்கு வழங்குகிறார் என்றால் சும்மாவா விடுவார் உத்தமவில்லன். 

நாற்பது ஆண்டுகால நட்பு என்று சொல்லிக்கொண்டே தனக்கு அரசியல் வாய்ப்பை யாசகம் தந்த புரட்சித் தலைவரையே திமுகவில் இருந்து நீக்கி மலையாளி என்றெல்லாம் மனசாட்சி துளியும் இல்லாமல் பேசிய நன்றி கெட்ட கருணாநிதியின் மனம் கவர்ந்த சீடனான கமல்ஹாசனிடம் இருந்து ரஜினி பெறப்போகிற பாடம் ஆறாத காயமாகும். மாறாத தழும்பாகும்.

 

அதுமட்டுமல்ல. வருடங்கள் கரைந்தாலும் வளர்பிறை சந்திரனாய் நிலைத்த புகழ் கொண்ட நிகரில்லா வள்ளலாம் புரட்சித் தலைவர் என்கிற புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனைகள் தாங்கள் என்பதை கமலும், ரஜினியுமே காலத்தால் உணர்கிற வாய்ப்பும் காத்திருக்கிறது. அப்புறம் என்ன ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்  கமலை புரிஞ்சிக்கிட்டேன்னு ரஜினி பரிதாபமாய் பாடும் வருங்காலம் உறுதியாக உண்டு. 

மன்னாதி மன்னன் மக்கள் திலகமும் விண்முட்ட வந்தாலும் விழி சிமிட்டா வீரத்திருமகள் அம்மாவும் மடியிட்டு வளர்த்த ஒன்றரை கோடி சிப்பாய்களின் கழகத்திற்கு அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லை. உச்ச நட்சத்திரமும், உத்தம வில்லனும் ஒன்று சேர்ந்து வந்தாலும் ஒரு நொடியும் அச்சம் என்பது இல்லை. கழகத்தை வீழ்த்த நினைத்தவர்கள் காணாது ஒழிந்தார்கள் என்கிற இன்னொரு வரலாற்றை எழுதுவதற்கு ஈரிலை இயக்கத்திற்கு கண்முன்னே காத்திருக்கு மேலும் ஒரு கற்கண்டு வாய்ப்பு. வாரே வா’’ என விமர்சித்து இருக்கிறது.