ரஜினியின் இளையமகள் சவுந்தர்யாவின் இரண்டாம் திருமணம் தொடர்பான குடும்பப் பஞ்சாயத்துகள் முடிவுக்கு வந்த நிலையில், ரஜினி தவிர்த்த அவரது குடும்பத்தினர் திருமண அழைப்பிதழை திருப்பதி பெருமாள் பாதத்தில் வைத்து சாமி தரிசனம் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேத்துப்பட்டு வீட்டில் தனியாக குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வேத் என்று பெயரிட்டனர். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, ஒருமித்த கருத்து அடிப்படையில், சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் விவகாரத்து பெற்றனர். 

இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும்  இடையில் காதல் மலர்ந்தது.  இவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்க இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்தது.  அதையொட்டி அண்மையில் சென்னையில் திருமணம் துவக்கத்தில் இவர்களுக்கு ஜனவரி மாதம் திருமணம் என்று கூறப்பட்டது.  ஆனால் திருமணத்தை எளிமையாக நடத்த ரஜினி விரும்ப, அவர் தவிர்த்த மற்ற அனைவரும் ஆடம்பரமாக நடத்த விரும்பினர். லதா ரஜினி போலவே மாப்பிள்ளை வீட்டாரும் கறிசோறு போட்டு தடபுடல் கல்யாணம் நடத்தவே விரும்பியுள்ளனர்.

பஞ்சாயத்தின் இறுதியில் ரஜினியின் பிடிவாதமே வென்றது, அவரது விருப்பப்படி திருமணம் மிகவும் நெருங்கிய ஒரு சிலருக்கு மட்டும் தகவலாகத் தெரிவிக்கப்பட்டு திருப்பதியில் நடைபெறும்.பின்னர் ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் குடும்பத்தினர் விருப்பப்படி ஒரு நட்சத்திர ஓட்டலில் ரிஷப்சன் நடைபெறும் என்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சவுந்தர்யா தனது தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சென்றதாக கூறப்படுகிறது. நேற்றுக் காலை சிறப்பு தரிசனத்தில் சுவாமி ஏழுமலையானை, சவுந்தர்யா, லதா தரிசனம் செய்து, திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்துள்ளனர். ஸோ சவுந்தர்யாவின் கல்யாணத்துக்கு கறி சோறு மட்டுமல்ல, சாம்பார் சாதம் கூட கிடையாது.