rajini cancelled photo session with fans

கடந்த சிலநாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த், ஏப்ரல் 1ம் தேதி சந்தித்து புகைப்படம் எடுப்பதாக அறிவித்தார். அதே நாளில், மலோசிய பிரதமர் சென்னை வந்தார். மேலும், நடிகர் சங்க கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.

இதனால், ரசிகர்களை பார்த்து, அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி ரத்தானது. இதையடுத்து வரும் 12ம் தேதி முதல் 16ம் வரை, சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திப்பதாக ரஜினி அறிவித்தார். 

இந்நிலையில், ரசிகர்களை மாவட்டந்தோறும் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே குறிப்பிட்ட தேதியை ரத்து செய்துள்ளதாகவும் நடிகர் ரஜினி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வாட்ஸ்அப் மூலம் ரசிகர்களுக்கு, அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், “என்னை வாழ வைத்த ரசிக பெருமக்களுக்கு நான் ரஜினிகாந்த். என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கு எல்லாம் ஒரு தகவல்.

10 ஆண்டுகள் ஆச்சு, நான் உங்களை சந்தித்து, போட்டோ எடுத்து, உங்களோடு உரையாடி. நீங்களும் என்கிட்ட தொடர்ந்து கேட்டுகிட்டே இருந்தீங்க பாக்கனும், போட்டோ எடுக்கனும் அப்படின்னு சொல்லிட்டு.

எனக்கும் நேரம் சரியா அமையல. சரி, இப்போ வந்து நேரம் கெடச்சதனால, உங்களயெல்லாம் பாக்குறதுக்கு 12ந் தேதில இருந்து 16ந் தேதி வரைக்கும், ராகவேந்திர மண்டபத்துல ப்ளான் பண்ணியிருந்தேன்.

ஒவ்வொரு நாளைக்கு 4 இல்ல 5 மாவட்டத்துல இருந்து ஆவரேஜா 300 பேரு, அந்த மாறி நம்ம ப்ளான் பண்ணி, ஒரு நாளைக்கு 1800, 2000 பேர கூப்ட்டு, போட்டோ எடுத்து, அவங்களுக்கெல்லாம் விருந்து கொடுத்து அனுப்பலாம்ன்னு என்னுடைய ஆசை, விருப்பம்.

அதுவந்து, அத்தனை பேரையும், 1800 இல்ல 2000 பேரை தனித்தனியா போட்டோ எடுப்பது பிராக்ட்டிகலா, நடைமுறையா செய்றது ரொம்ப கஷ்டம்.

இதனால், 8, 8 பேரா, ஒரு குரூப்பா போட்டோ எடுக்கலாம்ன்னு நம்ம முடிவு பன்னியிருக்கோம். மேலும் குரூப்போட்டோ எடுத்தால் வீட்ல எப்படி அந்த படத்தை மாட்டி வைக்க முடியும். அதனால தனித்தனியா போட்டோ எடுக்கனும்ன்னு ஒருத்தர் விடமான, எல்லாரும் கோரிக்கை வச்சாங்க.

அவங்கள சொல்றதுலேயும் ஒரு நியாயம் இருக்கு. ஆனால், தனித்தனியா எல்லோரும் வந்து போட்டோ எடுக்கனும்ன்றது கஷ்டம்ன்றதால, இப்ப வந்துட்டு, 12ந் தேதில இருந்து 16ந்தேதி வரைக்கும் போட்டோ எடுக்குறது கேன்சல் பன்னிட்டு, வருங்காலத்துல ஒவ்வொரு மாவட்டமா போயி, ரசிகர்கள பாத்து, தனித்தனியா போட்டோ எடுக்கலாம்ன்னு திட்டமிட்டுருக்கேன். ஐ திங்க், நீங்க இதுக்கு ஒத்துப்பீங்க, சம்மதிங்கன்னு நினைக்கிறேன்”.