சன் பிக்சர்ஸ் விஜய் இணைந்து உருவாக்கப் போகும் விஜய்65 படத்திற்கு யார் இயக்குனர்? இந்த கேள்விக்கு விடை கிடைப்பதற்குள் ரசிகர்களின் பியூஸ் கேரியர் நாலாபுறத்திலும் சிதறிவிடும் போலிருக்கிறது.

ஏன்? விஜய்யே அதை இன்னும் தீர்மானிக்கவில்லை. ஃபுல் காமெடி பிலிம் ஒன்று வேண்டும் என்று நினைக்கும் விஜய், தனது முன்னாள் இயக்குனர்களான செல்வபாரதி, எழில், பேரரசு உள்ளிட்ட பலரிடமும் கதை கேட்டாராம். கடைசியில் உதட்டை பிதுக்கியவர், ‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வரவழைத்து கதை கேட்டிருக்கிறார்.

ரைட்டா தொடங்குச்சா, ராங்கா முடிஞ்சுச்சா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால், விஜய் டிக் அடித்தது வேறொரு இயக்குனரை. அவர்தான் இறுதி சுற்று, சூரரை போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா. நல்ல தேர்வுதான். கோலிவுட்டில் எத்தனை படங்களின் படப்பிடிப்பு நடந்தாலும் தற்போது ‘கைதி’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிவரும் ‘மாஸ்டர்’படத்தைப் பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. வரும் சித்திரை திருநாள் தினத்தில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்றும் அந்தப் படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல்’நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்றும் நம்பகமான தகவல் கிடைக்கிறது. தற்போது ‘சிறுத்தை’சிவா இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, அந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் குரல் சேர்ப்பு வேலைகள் முடிவடைந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இதனால் சிவாவைத் தொடர்ந்து ரஜினியை இயக்குவது யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

கமல்ஹாசன் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் கமலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கக்கூடும் என்று கமல் திரையுலக நண்பர்கள் வட்டத்தில் கூறுகிறார்கள். இந்தப் படம் பற்றிய உத்யோகபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்காலம்.