புதிய தமிழ்ப்படங்களை,  ரிலீஸானதில் இருந்து நூறு நாட்கள் கழித்துதான் அமேஸான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களுக்கு  வழங்க வேண்டும்! அதற்கு முன் வழங்கினால் இனி அந்த தயாரிப்பாளரின் படங்களை நாங்கள் தியேட்டரில் போட மாட்டோம்!... என்று தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன் தடாலடியாக அறிவித்துள்ளது. 

அதாவது புதிய படங்கள் ரிலீஸான சில நாட்களிலேயே டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. 

சேனலுக்கு விற்கையில் நல்ல லாபம் கிடைப்பது போல், டிஜிட்டல் தளங்களுக்கும் விற்று லாபம் பார்க்க துவங்கியுள்ளனர் தயாரிப்பாளர்கள். இதைத்தான் எதிர்க்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். 
இந்த சூழலில், தமிழக திரையரங்க உரிமையாளர்கள் அசோஸியேஷனின் தலைவரான சுப்பிரமணியன் என்பவர் பிரபல அரசியல் வாரம் இருமுறை இதழொன்றுக்கு வழங்கியிருக்கும் பேட்டியில், மாஸ் ஹீரோக்களை வெளுத்தெடுத்திருக்கிறார். 
அவரது சாடல்களின் ஹைலைட் பாயிண்டுகள் இதோ....

*தமிழ் சினிமாவின் மெகா நடிகர்களுக்கு மனிதாபிமானம் என்பதே இல்லை. தனக்கு கோடிகோடியாய் அள்ளிக் கொடுக்கும் சினிமா துறை சீரழிஞ்சுட்டு இருக்குது. அதைப் பற்ரி அந்த நடிகர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. கோடி கோடியாய் சம்பளம் வாங்கிட்டு, கவலையே இல்லாம செட்டிலாகிடுறாங்க. 

*உதாரணத்துக்கு ஒரு படத்தோட தயாரிப்பு செலவு நூறு கோடின்னா, அதில் ஹீரோ சம்பளம் மட்டுமே எழுபது கோடியாக இருக்குது. இப்படி இருந்தால் இந்த இன்டஸ்ட்ரி  எப்படி வெளங்கும்?

*படத்தின் தயாரிப்பு செலவை விட பல மடங்கு அதிக கோடிகளில் சம்பளம் வாங்கும் மெகா நடிகர்கள், அந்தப் படம் நஷ்டமடைகையில் தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு தோள் கொடுக்கமாட்டேங்கிறாங்க. 

*இப்படி அக்கறையில்லாமல் இருக்கும் இந்த மெகா நடிகர்கள் திருந்தணும். தன் துறையை காப்பாற்ற கை கொடுக்கிற அக்கறை இல்லாத இந்த நபர்கள் முதலமைச்சர் கனவில் வலம் வருவதுதான் கேலிக்கூத்து. 

*ராகவேந்திரா படம் தோல்வி அடைஞ்சப்ப ரஜினிகாந்துக்கு இருந்த உதவி மனப்பான்மை இப்போது அதே ரஜினியிடம் இல்லை. 

*நாற்பது நாட்களுக்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக் நடந்தப்ப இந்த மெகா நடிகர்கள் ஒரு வார்த்தை கூட எங்களை அக்கறைப்பட்டு விசாரிக்கலை. இந்த தியேட்டர்காரங்க இல்லாமல் மக்களை அவங்க படங்கள் போய் சேர்ந்துடுமா என்ன? நாங்கதானே இவங்களை தலையில் தூக்கிட்டு சுத்துறோம். ஆனால் எங்களை இந்த மெகா நடிகர்கள் மதிப்பதில்லை. 


* கோடி கோடியான சம்பளத்தில் புரளும் இவர்கள், தியேட்டர் ஸ்டிரைக்கின் போது கிராமப்புற தியேட்டர்களில் டிக்கெட் கிழிக்கும், பாப்கார்ன் விற்கும் சாதாரண நபர்களை பற்றி என்றைக்காவது சிந்தித்திருக்கிறார்களா? ஆனால் அந்த லீவில் ஜாலியாக டூர் சுற்றிக் கொண்டிருந்தார்கள் ஃபாரீனில். இவர்களுக்கு, மனிதாபிமானம் எனும் வார்த்தையின் அர்த்தம் கூட தெரியாது என்பதே உண்மை.” என்று விளாசியிருக்கிறார். 
பாப்கார்ன் ரேட்  என்ன சார்!?
-    

-விஷ்ணுப்ரியா -