இன்று மாலை நடக்கவிருக்கும் ‘காப்பான்’பட ஆடியோ விழாவில் கமலும் ரஜினியும் கலந்துகொள்வதாக உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியில் ரஜினி சூர்யாவின் கல்விக்கொள்கை குறித்து என்ன கருத்து சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள சூர்யா, பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஏழை மாணவர்களின் பள்ளி கல்வி மற்றும் உயர் கல்விக்கு உதவும் வகையில், அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அரசு பள்ளிகளையும், மாணவர்களையும் தத்தெடுத்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். அதிக மதிப்பெண் எடுக்கும் ஏழை மாணவர்களின் கல்வி செலவுகளை ஏற்பதோடு, அவர்களில் உயர் கல்விக்கும் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் உதவி செய்கிறது.

 இதற்கிடையே, மத்திய அரசின் புதிய கல்வி முறைக்கு நடிகர் சூர்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதில் இருக்கும் குறைபாடுகளை பத்திரிகையாளர்களிடம் சுட்டி காட்டினார். சூர்யாவின் இந்த கண்டனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்தார். இதையடுத்து, சூர்யாவின் பேச்சுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்ததை தொடர்ந்து, புதிய கல்வி முறையின் இருக்கும் குறைபாடுகள் பற்றி பல தரப்பினர் பேச தொடங்கியுள்ளனர்.

 சூர்யாவின் கண்டனத்திற்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை தனிப்பட்ட முறையில் மாநில அமைச்சர்களும், பா.ஜ.க பிரமுகர்களும் விமர்சித்து வருகிறார்கள்.புதிய கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யாவுக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்த நிலையில், எப்போதும் போல ரஜினிகாந்த் மவுனம் காத்து வருவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படும் ரஜினிகாந்த், அவர்களது கல்வி கொள்கைக்கு எப்படி எதிர்ப்பு தெரிவிப்பார், என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.

 இந்த நிலையில், சூர்யாவின் புதிய கல்வி முறை மீதான கண்டனத்திற்கு ரஜினிகாந்த் நேரில் வரவேற்பு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆம், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சின் இன்று மாலை சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்கிறார். அவர் நிகழ்ச்சியில் பேசும் போதும், நிச்சயம் புதிய கல்வி முறைக்கு எதிரான சூர்யாவின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி ரஜினிகாந்த் சூர்யாவின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்தால் தமிழக அரசியலில் பெரும் அதிர்வு ஏற்படும். அது நடக்காமல், இங்கேயும் புதிய கல்வி முறை குறித்து பேசாமல் ரஜினிகாந்த் மவுனமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் ரஜினி எப்போதும் பா.ஜ.கவினரை பகைத்துக்கொள்ள விரும்புவதில்லை. உச்சபட்சமாக ஏதாவது சாக்குபோக்கு சொல்லி நிகழ்ச்சிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கவும் வாய்ப்புண்டு.