ஏற்கனவே கிடைத்துள்ள ஓவர் பப்ளிசிட்டியால் ‘ஆடை’படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பிரபல அரசியல் பிரமுகர் ராஜேஸ்வரி பிரியா  படத்தில் வரும் நிர்வாண காட்சிகளை நீக்கக் கோரி இன்று  டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளார்.

அமலா பாலின் ஆடையில்லாத காட்சிகளுக்காக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ‘ஆடை’படம் நாளை மறுநாள் வெள்ளியன்று ரிலீஸாகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள அமலா பாலின் முழ்நிர்வாண காட்சிகள் மற்றும் விஜே ரம்யாவுக்கு லிப்லாக் கொடுக்கும் காட்சிகளுக்காக படத்துக்கு ‘ஏ’சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற படங்களுக்கு பெண் போராளிகள் மத்தியில் பெரும் போராட்டங்கள் கிளம்பும் என்கிற நிலையில் இதுவரை இப்படத்தை எதிர்த்து யாரும் கிளம்பவில்லை.

இந்நிலையில் முன்னாள் பா.ம.க.பிரமுகரும் அடுத்து கமல் கட்சிக்கு தாவ நினைத்து ஒரே நாளில் யூடர்ன் அடித்து அமமுக கட்சிக்கு சென்றவரும் தற்போது எந்தக் கட்சியில் தான் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளமுடியாதவருமான ராஜேஷ்வரி பிரியா ‘ஆடை’படத்திலுள்ள ஆடையில்லாத காட்சிகளை நீக்கச்சொல்லி டிஜிபியிடம் மனு கொடுக்கவுள்ளார். இதே ராஜேஷ்வரிதான் சில தினங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பெண்கள் அணியும் குட்டைப் பாவாடைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.