இயக்குனர் ராஜமௌலி, இரண்டு பாகங்களாக இயக்கிய பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, தற்போது இயக்கிவரும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இரண்டு சுதந்திர வீரர்களின் வாழ்க்கையை குறித்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை பிரபாஸ் மற்றும் ராணாவை வைத்து பாகுபலி படத்தை இயக்கி இருந்த இவர்,  இந்த முறை தெலுங்கு முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா இருவரை வைத்து 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார்.  

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது சுதந்திர வீரர்களின் வாழ்க்கையை பற்றிய படம் என்பதால் ஆகஸ்ட் 15-ம் தேதியை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து பட தரப்பினரிடம் இருந்து அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாததால், சுதந்திர தினம் அன்று டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருமா? வராத? என சந்தேகத்துடனேயே காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.  இந்த படம் 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.