நடன இயக்குனர் என்கிற அடையாளதோடு, தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, பின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என படி படியாக தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். திரையுலகை அடுத்து, தன்னுடைய தொண்டு நிறுவனம் மூலம் பல குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு உதவி வருகிறார்.

இவர் சிறிய வயதில் இருந்தே தீவிர ரஜினி ரசிகன் என்பதை பல மேடையில் அவரே கூறியுள்ளார். சூப்பர் ஸ்டாரின் வழியையே தானும் பின் பற்றி வருவதாகவும் பெருமையாக கூறுவார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில், லாரன்ஸ், ரஜினிகாந்தின் படங்களுக்கு போட்டியாக கமல் படம் வரும் போது... கமலின் போஸ்டரில் சாணி அடித்ததாக கூறியது. கமல் ரசிகர்களை மிகவும் கோபம் கொள்ள வைத்தது. இதனால் பலர் ராகவா லாரன்சுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர்.

இதனை தெளிவு படுத்தும் விதமாக, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பெருமை படுத்தும் விழா மேடையில் பேசிய ராகவா லாரன்ஸ், 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் தான் பேசிய விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக கூறி, தான் சொல்ல வந்த விஷத்தை விவரித்தார். நான் சிறியவனாக இருந்தபோது, அது தனக்கு எதும் தெரியாத வயது என கூறி விளக்கம் அளித்தார்.

அதே போல், இப்போது ரஜினி - கமல் இருவரும் கை கோர்த்து நடந்து வரும் போது நாம் தான் தவறாக நினைத்து விட்டோம் என கஷ்டமாக உள்ளது. இப்போது தான் ரஜினி - கமல் ரசிகர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறினார்.

மேலும் தனக்கும் கமல் சாருக்கும் இடையே எந்த ஒரு பிரச்னையும் இல்லை. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கூட அடுத்ததாக கமல் சார் நடிக்க உள்ள 'தலைவன் இருக்கிறான்' படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க தன்னை அழைத்தார். ஆனால் 'கால பைரவா' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளதால் அதில் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார் ராகவ்...