கொரோனா ஊரடங்கால் ஆயிரக்கணக்கான தினக்கூலி சினிமா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எண்ணற்ற ஏழை தொழிலாளர்கள் ஒருவேளை உணவிற்கு கூட வழியின்றி கஷ்டப்பட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உதவிக்கரம் நீட்டி வரும் ராகவா லாரன்ஸ் பிற நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் உதவி கோரி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது சூப்பர் ஸ்டாருக்கு நன்றி, நண்பர்களே, ரசிகர்களே கொரோனா நிதிகாக ரூ.3 கோடி ரூபாய் கொடுப்பதாக நான் அறிவித்த பிறகு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் என்னை உதவிக்கு அணுகி வருகின்றனர்.எனவே இந்த ரூ.3 கோடி தவிர்த்து விநியோகஸ்தர்கள் சங்கத்துக்காக டி.ராஜேந்தருக்கு ரூ.15 லட்சம், நடிகர் சங்கத்துக்கு ரூ.25 லட்சம் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளேன். தற்போது செலவுகள் ரூ.3 கோடியைத் தாண்டிவிட்டதால் லட்சுமி பாம் படக்குழுவினரின் கடைசித் தொகையை நேரடியாக பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பி விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன். மக்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்வதை கடமையாக நினைக்கிறேன். 

இப்போதும் எனக்கு பல கடிதங்கள், வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில் மக்கள் அடுத்த வேலை உணவுக்காக போராடும் சூழ்நிலையை பார்க்கிறேன். அவர்கள் பணம் கேட்கவில்லை. அரிசி வழங்குவதன் மூலம் அவர்கள் சமைத்து சாப்பிட முடியும். முதியவர்கள், குழந்தைகள் என பலர் இப்படி கஷ்டப்படுவது வேதனையளிக்கிறது. இதை குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். அப்போது என் தம்பி எல்வின் ஒரு யோசனை சொன்னார். ஒரே மனிதனால் பலருக்கும் உதவ முடியாது. உதவி செய்ய பலர் காத்திருக்கின்றனர். எனவே அவர்களிடமும் உதவி கேட்கலாம் என்றார். இதை முதலில் எனது தலைவர் சூப்பர் ஸ்டாரிடம் சொல்லி அரிசி மூட்டைகள் அனுப்ப முடியுமா? என்று கேட்டேன். உடனே அவர் 100 மூட்டை அரிசி சுதாகர் மூலமாக எனக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மேலும் கமல், அஜித், விஜய், சூர்யா இன்னும் அனைத்து நடிகர்கள், அரசியல்வாதிகள் உதவி செய்ய விரும்புபவர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு சிறிய உதவி கூட கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரும். இதை நாங்கள் பணமாக சேகரிக்கவில்லை. யாரேனும் உணவுப் பொருட்களாக அனுப்ப விரும்பினால் நாங்கள் அதை சேகரித்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாங்களே விநியோகமும் செய்வோம். கீழ்காணும் முகவரிக்கு உங்கள் பொருட்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.