தங்களை மானங்கெட்டவர்கள் என்று திட்டிய அன்புமணி, ராமதாஸ் வீட்டிலேயே போய் விருந்து சாப்பிடும் எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும்தான் உண்மையிலேயே மானங்கெட்டவர்கள் என்று விளாசியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

ஆளும் அதிமுக அரசின் மீதும், திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தவர்கள் பாமக. இனி ஒருபோதும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவது இல்லை என்றும், வேண்டுமென்றால் பத்திரம் எழுதித் தருகிறேன் என்று கூறியவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால் தற்போது மக்களவை தேர்தலுக்காக அதிமுக உடன் பாமக கூட்டு சேர்ந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்து, அக்கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் வெளியேறினர். தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் இடையே குழப்பம் நீடித்து வருகிறது. 

இந்நிலையில் அந்தக்கூட்டணி குறித்து சென்னையில் பேசிய நடிகர் ராதாரவி, ’’இதுபோன்ற மானங்கெட்டவர்களை பார்த்ததில்லை என்று அதிமுகவை ராமதாஸும், அன்புமணியும் திட்டி வந்தனர். ஆனால் தற்போது 7 தொகுதிகளை வாங்கிக் கொண்டு, நாட்டை ஆளப் போகிறோம் என்று கூறுகின்றனர். 

மேலும் மானங்கெட்டவர்கள் என்று யாரால் விமர்சிக்கப்பட்டார்களோ அவர்கள் வீட்டிற்கே எடப்பாடியும் ஓ.பன்னீர்ச்செல்வமும்  சென்று விருந்து சாப்பிடுகின்றனர். அப்படி என்றால் மானங்கெட்டவர்கள் என்று தெளிவாய் தெரிந்து விட்டது. தமிழ்நாட்டிற்கு காவிரி வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? ஸ்டெர்லைட் விவகாரத்தில் யார் செத்தால் என்ன? சாகாவிட்டால் என்ன? தங்களுக்கு பணத்தை எப்படி கொடுப்பீர்கள்? எடை கட்டியா? இல்லை அப்படியே கொடுப்பீர்களா என்பதில்தான் அவர்கள் கவனம் இருக்கிறது’ என்கிறார் ராதாரவி.