Raajamouli impressed Rajinikanth wishes for baahubali 2
உலக சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியா மட்டுமன்றி உலகளவில் பல்வேறு வசூல் சாதனைகளை செய்துள்ளது ''பாகுபலி 2 ''. இத்திரைப்படம் முதல் நாளில் அனைவருக்கும் பங்கு தொகை போக 125 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது. முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
'பாகுபலி 2' படத்துக்கு பல்வேறு இந்திய திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ரஜினிகாந்த்க்கு இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டார்கள்.
இப்படம் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "பாகுபலி-2 இந்திய சினிமாவின் பெருமித அடையாளம். ராஜமெளலிக்கும் அவரது குழுவுக்கும் எனது வந்தனங்கள். மகத்தான படைப்பு" என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் ட்வீட் மேற்கோளிட்டு 'தலைவா... கடவுளே வாழ்த்தியதுபோல் உணர்கிறேன்' என்றார் இயக்குநர் ராஜமெளலி ஒட்டுமொத்த குழுவும் பெருமகிழ்ச்சியில் இருக்கிறது. இதைவிட சிறந்த வாழ்த்து ஏதுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் ஷங்கர் 'பாகுபலி 2' படத்தைப் பார்த்தேன். இந்திய சினிமாவின் பெருமித அடையாளம். என்ன ஒரு பிரம்மாண்டம், என்னே துணிச்சல், எத்தகைய அழகு, இசை..ராஜமெளலிக்கும் அவரது குழுவுக்கும் வாழ்த்துகள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூப்பர்ஸ்டார் மற்றும் பிரம்மாண்டத்தின் பாராட்டால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.
