Puneeth movie release : கன்னட நட்சத்திரம் புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ், மறைந்த புனித்தின் பிறந்தநாளான மார்ச் 17 அன்று வெளியாகிறது. இது குறித்த புதிய போஸ்டர் ஜனவரி 26 அன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது...
கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 29 அன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல், கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 46 வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியாமல் போனது. பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புனீத் ராஜ்குமார் உயிருடன் இருந்தபோது அவர் ஏழை, எளிய மக்களுக்கு செய்த உதவிகள், ஏழைக் குழந்தைகளின் கல்விகாக செய்த செலவு என அவரைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியானதால், அவர் மீது மரியாதையும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. பெங்களூரிவில் உள்ள அவருடைய நினைவிடத்தைக் காண அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் நாள்தோறும் வந்து பார்வையிட்டு மரியாதை செய்து வருகின்றனர். அவரை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ஜேம்ஸை அவரது முதல் பிறந்தநாளான மார்ச் 17, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 26 ஆம் தேதி காலை 11.11 மணிக்கு சிறப்பு போஸ்டரை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இயக்குனர் சேத்தன் குமார் அறிவிப்பைப் பகிர்ந்துகொண்டு, "#Bolobolojames (sic)" என்று எழுதியுள்ளார்.
அதோடு மறைந்த நடிகரை கவுரவிக்கும் வகையில், கன்னட திரையுலகில் உள்ள பிரபலங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஜேம்ஸ் படத்தை தனியாக வெளியிட முடிவு செய்துள்ளனர். எனவே மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு புதிய கன்னட படங்கள் எதுவும் வெளியாகாது. அதாவது மார்ச் 17 முதல் மார்ச் 23 வரை ஜேம்ஸின் தனி வெளியீடு இருக்கும்.
