நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் விஷாலின் மனுவை விசாரிக்கவேண்டாம் என்று நீதிபதி ஒருவரை தொடர்புகொண்ட   வழக்கில் ஐசரி கணேசிற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புக்கொண்ட அவர் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினார்.

நடிகர் சங்கத் தேர்தலை இரண்டு வாரத்திற்குத் தள்ளிவைக்கும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் அணி சார்பாக போட்டியிட்ட ஐசரி கணேஷும், அவரது நண்பரும் தன்னை அணுகியதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பகீர் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.தன்னை ஐசரி கணேஷ் அணுகியது தொடர்பாக நீதிபதி  வெளியிட்ட அறிக்கையில்,``தலைமை நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் எனது வீட்டில் வழக்கு எண் 16949 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு எனது இல்லத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இது தொடர்பாக காலை 11.55 மணிக்கு நீதிமன்றப் பதிவாளர் எனக்கு போன் செய்தார். நிகழ்ச்சி நிமித்தமாக வேலூர் சென்றிருந்த நான் அதை வேகமாக முடித்து விட்டு வீடு திரும்பினேன். அப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நெருங்கும்போது மணி 4.20. எனக்கு நன்கு அறிமுகமான ஆனந்தராமன் என்பவர் போன் செய்தார். தொடர்ந்து, மெதுவாக நடிகர் சங்க வழக்கு குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது, ``இந்த வழக்கில் ஐசரி கே கணேஷ் சம்பந்தப்பட்டுள்ளார். நடிகர் சங்கத்தின் பல பிரச்னைகளுக்கு உதவி செய்துள்ளார் " எனவும் தெரிவித்தார்.

``வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளி வைத்தால், தேர்தலையும் தள்ளிப் போட வசதியாக இருக்கும்" எனவும் தெரிவித்தார். எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் அவர் பேசியதையத்து அந்த போன் இணைப்பைத் துண்டித்து விட்டேன். நான் எனது இல்லத்தை அடையும் போது நேரம் 4.45 மணி. ஏற்கெனவே பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு என்பதால் எனது வீட்டின் முன் காவல்துறையும், பத்திரிகை ஆட்களும் இருந்தனர்.

இரண்டாம் தளத்தில் இருக்கும் எனது வீட்டை அடைவதற்குள் ஆனந்தராமனை லிஃப்ட் அருகே பார்த்தேன். மீண்டும் ஐசரி பற்றியும் வழக்கை ஒத்தி வைப்பது குறித்து பேசினார். நடிகர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் ஒருவரே நீதிபதியை தவறான முறையில் அணுகுவது அதிர்ச்சியாக இருந்தது. நீதிமன்ற வழக்கின் போக்கில் குறுக்கிட்டதால் ஏன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கக் கூடாது" எனக் கூறியிருந்தார். 

அந்த வழக்கின் மீதான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் சென்னை  உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஐசரி கணேஷ். தனது தவறுக்கு அபராதமாக ரூபாய் 10 லட்சத்தை செலுத்தவும் ஒப்புக்கொண்ட அவர் அப்பணத்தை ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் திருநங்கைகளின் நலனுக்குத் தருவதாகவும் ஒப்புக்கொண்டார்.