ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரான ஆனந்த் என்பவர் தனது நண்பர் மணிகண்டன் என்பவருடன் இணைந்து நிதி நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் மாதம் அதிக வட்டி என வழக்கம் போல் ஆசை காட்டியுள்ளார. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8ஆயிரம் ரூபாய் வரை வட்டி வழங்கப்படும் என்று ஆசிரியர் ஆனந்த் விளம்பரம் செய்ய அவர் ஆசிரியர் என்பதால் நம்பி ராமநாதபுரம் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதனால் ஆசிரியர் ஆனந்தன் காட்டில் பண மழை பெய்துள்ளது. 

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனத்தில் அதிகம் ஊதியம் பெறுபவர்களை குறி வைத்து சதுரங்கவேட்டை பட பாணியில் ஆசிரியர் ஆனந்தன் முதலீட்டு பணத்தை பெற்றுள்ளார். சொன்னது போல் வட்டித் தொகையை முதலில் ஆசிரியர் ஆனந்தன் கொடுத்ததால் இவரை நம்பி பலர் வேறு சிலரை ரெகமெண்ட் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த அக்டோர் மாதத்திற்கு பிறகு ஆசிரியர் ஆனந்தன் வட்டி வழங்குவதை நிறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பலர் ராமநாதபுரம் காவல் நிலையத்தை அணுக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அண்மையில் ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டனர். 

மணிகண்டன் என்கிற துளசி மணிகண்டனிடம்  நடத்தப்பட்ட விசாரணையில் வாடிக்கையாளர்களிடம் ரூ.145 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு ரூ.95 கோடியை செலுத்திவிட்டதாகவும், மீதம் 50 கோடி ரூபாய் பாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத் தயாரிப்பாளர்களான சேலத்தைச் சேர்ந்த சிவா, சென்னையைச் சேர்ந்த ஞானவேல்ராஜா, முருகானந்தம் ஆகியோரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். பட தயாரிப்புக்கு என்று ஞானவேல் ராஜாவிடம் தாங்கள் பணம் கொடுத்து வைத்திருப்பதாக ஆனந்தன் மற்றும் மணிகண்டன் கூறியுள்ளனர்.

இதன் அடிப்படையில் விசாரணைக்கு வருமாறு ஞானவேல்ராஜாவை போலீசார் அழைத்த நிலையில் வராமல் உயர்நீதிமன்றம் சென்றார். விசாரணையின்போது தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் அவரை ஆக.14-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்றும், அதுவரை போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உத்தரவிட்டிருந்தது.ஞானவேல் ராஜாவும் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி ராமநாதபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். 

இதையடுத்து நேற்று வழக்கு மீது விசாரணை நடைபெற்றது. வணிக நோக்கிலேயே பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஞானவேல் ராஜா தரப்பு கூறிய விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து போலீசார் முறையாக அழைக்கும் போது நேரில் ஆஜராக ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ஞானவேல் ராஜாவிற்கு முன்ஜாமீன் வழங்கியது.