திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து இன்று முதல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த வேலைநிறுத்தத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக குறிப்பிடும்படியான திரைப்படங்களின் வெளியீடு எதுவும் நாளை இருக்காது என கூறப்படுகிறது. 

தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் கோரிக்கை விடுத்தும் டிஜிட்டல் சேவை வழங்குநர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே அதை கண்டித்து இன்று முதல் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்கிறது. இன்று முதல் எந்தவொரு திரைப்படத்தையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. 

ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என திரையரங்க உரிமையாளர் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அதனால், திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் புதுப்படங்களை தருபவர்களுக்கு முன்னிரிமை கொடுத்து திரையிடப்படும் எனவும் திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. புது படங்கள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் ஏற்கனவே உரிமை பெற்றிருக்கும் திரைப்படங்களை திரையிடுவோம் அல்லது பழைய படங்களை திரையிடுவோம் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.