புருவ அழகி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் மலையாள நடிகை ப்ரியா வாரியர் தனக்கு பிடித்த நடிகர் சிவ கார்த்திகேயன் என்று தெரிவித்துள்ளார்.

பிரேமம்' படத்தில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவி இளைஞர்களை வசீகரம் செய்தார். பிறகு, 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் வந்து சாய் பல்லவியை சைடு வாங்கினார். இவர்கள் அத்தனை பேரையும் பின்னுக்கு தள்ளியிருக்கிறார் 'ஒரு அடார் லவ்' மலையாளப் பட நாயகியான ப்ரியா வாரியர்.

மலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்', `சங்ஃஸ்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடார் லவ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ பாடல் ஒன்றை கடந்த  மாதம் 9-ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது. 'மாணிக்ய மலராய பூவி' என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். 

ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி காதல் பார்வை பார்க்கும் ப்ரியா வாரியர் தான் சமூக வலைதளங்களில்  ட்ரெண்டானார்.  

இந்த வீடியோவுக்குப் பிறகு, ப்ரியா வாரியருக்கென தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம்  உருவாகியிருக்கிறது.

சமூக வலைதளங்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் பிரபலமான பிரியா வாரியர். அந்த வைரல் சம்பவத்திற்கு பிறகு நிறைய படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது.அண்மையில் கூட அவர் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கிற்குஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரியா வாரியரிடம் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை காட்டியபோது தனக்கு மிகவும் பிடித்தமான  நடிகர் இவர்தான் என்று கூறியுள்ளார்.