சி.பி.ஐ.யால் மிகத் தீவிரமாகத் தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் குறித்து கமெண்ட் அடித்த பிரேமலதா விஜயகாந்த் கேப்டனின் பட வசனமான ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிக்கணும்...ஊழல் செய்தவன் தண்டனை அனுபவிக்கணும்’என்பதை மேற்கோள் காட்டினார்.

சென்னை சாலிகிராமம் அபுசாலி சாலையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு மேல் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பணியின் காரணமாக அபுசாலி சாலை மிகவும் மோசமடைந்து உள்ளது.ஆற்காடு சாலையை இணைக்கும் முக்கிய சாலை இது என்பதால் தினந்தோறும் ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடந்து சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலையில் விருகம்பாக்கம் காவல் நிலையம் மற்றும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்து உள்ளது. அருகில் 2 பெரிய பள்ளிக்கூடங்கள் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலையில் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இது குறித்து ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பழுதடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை மழை காலத்திற்கு முன்பாக துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.சேறும் சகதியுமாக காட்சி அளித்து வந்த அபுசாலி சாலையை சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். பிரேமலதா நடந்தே சென்று சாலையை சீரமைக்கும் பணியில் தானும் ஈடுபட்டு ஆய்வு செய்தார். இதில் சாலையில் மணல் கொட்டி ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் கூலி தொழிலாளிகள் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் தினகர், பகுதி செயலாளர்கள் சதீஷ்காந்த், லட்சுமணன், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர்,’கழிவு நீர் கால்வாய் பணி இந்த பகுதியில் 4, 5 மாதமாக நடைபெற்று வருகிறது. இதனால் குப்பை அள்ளக்கூடிய லாரிகள் தெருக்களுக்கு வர முடியவில்லை. இதன் காரணமாக குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்த பகுதி மக்களோடு நாங்கள் வசித்து வருவதால் கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து இந்த சாலையை சீரமைக்கிறோம். மக்கள் பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுக்க கூடியவர் கேப்டன். அந்த அடிப்படையில் இந்த சாலையை சரி செய்கிறோம்.

இது அரசுக்கு எதிராகவோ காவல்துறைக்கு எதிரான போராட்டமோ அல்ல. இந்த பகுதி மக்களுக்காக செய்கின்ற இந்த பணி. இன்று மாலைக்குள் முடியும். தேவைப்பட்டால் நாளை நடைபெறும். ஐ.என்.எஸ். மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கேப்டன் விஜயகாந்த் ‘‘உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான். ஊழல் செய்தவன் தண்டனை அனுபவிப்பான்’’ என்று ஒரு படத்தில் வசனம்  சொல்வார்.  சிதம்பரம் விவகாரத்தைப் பொறுத்தவரை கேப்டனின் வசனம் அப்படியே பொருந்திப்போவதாகத்தான் நான் கருதுகிறேன்’என்றார் பிரேமலதா.