தேர்தல் தோல்வி குறித்து எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. இன்னும் மூன்றே மாதங்களில் முறைப்படி அரசியல் கட்சி தொடங்கவிருக்கிறேன்’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடியின் பிரதம எதிர்ப்பாளரும் வில்லன் நடிகருமான பிரகாஷ்ராஜ்.

திரையுல பிரபலங்களில் நடிகர் மாதவன், சித்தார்த் வரிசையில் மோடியைத் தொடர்ந்து விமர்சித்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களம் இறங்கினார். கர்நாடக மீடியாக்கள் பிரகாஷ் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ கணிசமான வாக்குகள் பெறுவார் என்று கணித்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக வேட்பாளர் பி.சி.மோகன் 6,02,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது இடத்தை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரிஸ்வான் ஹர்சத் பெற்றார். இதற்கு அடுத்தப்படியாக நடிகர் பிரகாஷ் ராஜ் 3-வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 28,906 மட்டுமே.

தேர்தல் தோல்வி குறித்து உடனே உணர்ச்சி வசப்பட்டுக் கருத்து தெரிவித்த பிரகாஷ் ராஜ், எனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது. மதசார்பற்ற இந்தியாவை உருவாக்க தொடர்ந்து சண்டையிடுவேன். இதற்கான கடினமான பயணம் தற்போது தொடங்கி உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரகாஷ்ராஜ்,”தமிழகத் தேர்தல்களில் கமல் வாங்கியிருக்கும் வாக்கின் சதவிகிதங்கள் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. எனவே அவரது வழியில் இன்னும் மூன்றே மாதங்களில் கட்சி ஆரம்பிப்பேன். அரசியலில் தீவிரமாக இயங்கும் முடிவிலிருந்து ஒருநாளும் பின்வாங்கமாட்டேன்’ என்று உறுதிபட அறிவித்தார்.