நடிப்பு நாயகன் பிரகாஷ்ராஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து...
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள் தமிழ் திரையுலகில் சோடை போனதில்லை என்பது வரலாறு. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல நட்சத்திரங்களை அறிமுகம் செய்த பாலசந்தர் கண்டுபிடித்த இன்னொரு நட்சத்திரம்தான் பிரகாஷ்ராஜ். இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு நம்முடைய உளங்கனிந்த பிறந்த நாளை தெரிவித்து கொள்கிறோம்.
கே.பாலசந்தரின் 'டூயட் படத்தில் அறிமுகமான பிரகாஷ்ராஜ், அதன் பின்னர் ஆசை, கல்கி, விடுகதை, என் சுவாச காறே, படையப்பா, அப்பு, வாஞ்சிநாதன், கில்லி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், அன்னியன் உள்பட பல படங்களில் முக்கிய வேடம் ஏற்று தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தியவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்துவருபவர்.
நடிகர் மட்டுமின்றி தயாரிப்பு மற்றும் இயக்குனராகவும் பிரகாஷ்ராஜ் திரையுலகில் ஜொலித்துள்ளார். தோனி, உன் சமையல் அறையில் போன்ற படங்களை இயக்கியுள்ள பிரகாஷ்ராஜ், அழகியதீயே, மொழி, அபியும் நானும், பயணம், உள்பட பல தரமான திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
திரைத்துறை மட்டுமின்றி சமூக சேவையிலும் அதிக நாட்டமுள்ள பிரகாஷ்ராஜ் தெலுங்கானா மாநிலத்தில் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள கொண்டரப்பள்ளி என்ற கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்.
'காஞ்சிவரம்' படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், 'இருவர்' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற பிரகாஷ்ராஜ் மேலும் பல விருதுகளை வென்று இந்திய திரையுலகில் மென்மேலும் ஜொலிக்க இந்த இனிய பிறந்த நாளில் அவரை வாழ்த்துகிறோம்.