‘மொத்த சம்பளம் கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று முரண்டு பிடித்து வாங்கிவிட்டு, தன் பட புரமோஷனுக்குக் கூட வராமல் எங்கள் கழுத்தை அறுத்திருக்கிறார் காமெடி நடிகர் கருணாகரன்’ என்று அறிமுக இயக்குநர் சீயோன் புலம்பினார்.

5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார்தனது ‘பொது நலன் கருதி’ பட  அறிமுக இயக்குநர் சீயோன். பிப்ரவரி 7-ம் தேதி படம் வெளியாக உள்ள நுலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர் மிஸ்கின், வசந்தபாலன், மீரா கதிரவன், திருமுருகன் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் சீயோன்,’’கந்து வட்டி பிரச்சனை குறித்த உண்மை சம்பவங்களை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். மக்கள் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும். படத்தில் முக்கிய வேடத்தில்  நடித்துள்ள கருணாகரனை நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தோம் ஆனால் அவர் ப்ரோமோஷனுக்கு எல்லாம் வர முடியாது என்பது போல பேசினார். டப்பிங் பேசுவதற்கு முன்பாகவே சம்பளம் மொத்தத்தையும் கொடுக்க சொன்னார். நாங்களும் கொடுத்து விட்டோம். ஆனாலும் நிகழ்ச்சிக்கு வரவில்லை . தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துக்கு புரமோஷன் பண்ணினால் போதும் என்று நினக்கிறார் போல. ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணவேண்டியிருக்கிறது என்பது கூட தெரியாமல் இப்படி கழுத்தை அறுக்கிறார்கள்’ என்றார்.

 அடுத்து பேசிய இயக்குநர் வசந்தபாலன்,’சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கின்றன . காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்’என்றார்.