நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் வரும் பொங்கலன்று வெளியாக உள்ள திரைப்படம் 'சுமோ'.  இந்த படத்தின் டிரைலர் நேற்று நடிகர் சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினர்.

இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக, 'வணக்கம் சென்னை' படத்திற்கு பின் நடிகை பிரியா ஆனந்த் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். ஜப்பான் மல்யுத்த வீரர்கள் 'சுமோவை' மையமாக வைத்து இந்த படம் காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது.

2 நிமிடம் 30 வினாடிகள் வெளியிடப்பட்டுள்ள, இந்த படத்தின் ட்ரைலரில், ஜப்பான் குத்து சண்டை வீரர் சுமோவாக யோஷினோரி தாஷிரோ என்பவர் நடித்துள்ளார்.

நடிகர் சிவா கடலுக்கு போகும் போது, கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடக்கும் யோஷினோரி  தாஷிரோ பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றுகிறார். ஒன்றரை வயது குழந்தையின் மனநிலையில் இருக்கும், சுமோ வீரரின் வாழ்க்கையில் என்ன நடந்தது, அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஜப்பான் சென்று, அவர் யார்? எப்படி ஜப்பானில் இருந்து இந்திய வந்தார் அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்கின்றனர்.

பின் சிவா அந்த சுமோ கலைஞருக்கு பயிற்சியாளராக மாறி, மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள வைக்கிறார். இந்த போட்டியில் சுமோவை சிவா ஜெயிக்க வைக்கிறாரா? இல்லையா என்பதை மிகவும் காமெடியாக படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தை எஸ்.பி. ஹோசிமின் இயக்கியுள்ளார். இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனராக பயற்றியவர்.  ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.