திரைப்படங்களில் போலீஸாரையும் வில்லன்களையும் விரட்டி விரட்டி வெளுக்கும் ஹீரோக்களில் ஒருவர் போலீஸின் ’வழுக்கி விழுந்து மாவுக்கட்டு’ ட்ரீட்மெண்டுக்கு பயந்து ஊர் ஊராக ஓடித் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தனது சூழலை விளக்கி ஒரு வீடியோவையும் வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டே திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகர் கவித்ரன். இவரது நடிப்பில் ‘நம்ம கத’ என்ற படம் உருவாகி வருகிறது. இவரது தந்தை எஸ்.எஸ். கண்ணன் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில் கவித்ரன் மற்றும் அவரது தந்தை எஸ்.எஸ். கண்ணன் ஆகிய இருவர் மீதும் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் நடிக்க சான்ஸ் தருவதாக தன்னிடம் பணம் பெற்று தன்னை ஏமாற்றிவிட்டதாக மாணவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.எஸ். கண்ணன், நடிகர் கவித்ரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எஸ்.எஸ். கண்ணன், கவித்ரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தனர். இந்த நிலையில் மேலும் இரு வழக்குகள் எஸ்.எஸ்.கண்ணன் மீது பதிவு செய்யப்பட்டதால் இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க கண்ணன், நடிகர் கவித்ரன் ஆகியோர் தலைமறைவாகி ஒவ்வொரு ஊராக தங்கள் ஜாகையை மாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கவித்ரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தனது தந்தை ஒரு தியாகி என்றும், சென்னையில் குறிப்பிட்ட ஒரு பகுதியின் முன்னேற்றத்திற்கு தனது தந்தை தான் காரணம் என்றும் ஆனால் தற்போது போலீசுக்கு பயந்து ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த இரு வழக்குகளிலும் தாங்கள் சிக்கினால், போலீசார் தங்களைப் பிடித்து கை, கால்களை முறித்து மாவுக் கட்டு போட்டுவிடுவார்களே என்ற அச்சத்தில் இருவரும் ஓடி ஒளிந்து கொண்டிருப்பதாகவும் கூறும் அவர் பொதுவாக தனது தந்தை யாரையாவது வெட்டினால் அவருக்கு 10 தையல்கள் போட வேண்டியிருக்கும். ஆனால் இப்போது புகார் கொடுத்திருப்பவர் 5 தையல்களே போட்டிருப்பதால் அந்த வெட்டு தனது தந்தையுடையது அல்ல என்றும் தெனாவட்டாகக் கூறியுள்ளார்.

தலைமறைவாகத் திரிவதோடு, இப்படி தெனாவட்டான வீடியோக்களையும் வெளியிட்டு வருவதால் கவித்ரன் மீது கொலவெறியில் இருக்கும் போலீஸார் ‘நம்ம கத’ஹீரோவுக்கு மாவுக்கட்டு கன்ஃபர்ம் என்கின்றனர்.