கொஞ்ச காலமாக ஓய்ந்திருந்த மீ டூ விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் பிரபல மலையாள நடிகர் விநாயகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நிறைய புகார்கள் வரத்தொடங்கின. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தமிழில் திமிரு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக, நடக்க முடியாதவராக நடித்திருந்தார். சமீபத்தில் இவர், பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். 

இந்நிலையில் தற்போது அவர் மீது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடலுமான மிருதுளா தேவி, மீ டூ புகார் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அழைத்த போது, ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது புகார் கொடுத்தார். தன்னை மட்டுமல்லாது தன் தாயையும் அவர் விருப்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதாக, விநாயகன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மலையாள நடிகர் திலீப் விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது விநாயகன் மீது கிளம்பியுள்ள பாலியல் புகாரால் மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.