இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'பட்டாஸ்'. 'கொடி' படத்தை தொடர்ந்து, இரண்டாவது முறையாக இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றான அடிமுறை என்கிற, கலையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அப்பாவாக நடித்திருக்கும் தனுஷுக்கு ஜோடியாக, நடிகை சினேகாவும், மகனாக நடித்திருக்கும் தனுஷுக்கு ஜோடியாக மெஹரின் பிரீசண்டா ஆகியோர் நடித்துள்ளனர். சத்திய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் 'பட்டாஸ் ' திரைப்படம், முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 6 . 5  கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.

மாமனார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான, 'தர்பார்'  கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மிரட்டுவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி வரும் நிலையில், பட்டாஸ் படத்தை பார்க்கவும் திரையரங்கில் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.