அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தை இயக்குநர்  பா.இரஞ்சித், தனது `நீலம்' புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

கதிர், கயல் ஆனந்தி மற்றும் சில புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இப்படத்துக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்துக்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பட பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதன் காரணமாகவே இப்படத்துக்கு ஏகப்பட்ட விளம்பரம் கிடைத்துள்ளது.

ஆணவக் கொலைகள் விபத்துக்களாகவும், தற்கொலைகளாகவும் சித்தரிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுவதை, வன்மத்தை தூண்டாமல் நடுநிலையாகவும், மிக எளிமையாகவும் சொல்லப்பட்டிருக்கும்   ‘பரியேறும் பெருமாள்’. திரைப்படம் பல விருதுகளை குவிக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த போன்றோர் இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜையும், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தையும் வெகுவாக பாராட்டினர்.

ஜாதிய ஏற்றத்தாழ்வு குறித்த கொடுமைகளை நுணுக்கமாக பேசும் இப்படம் தற்போது கோவாவில் நடைபெறும் 49வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாரி செல்வராஜுக்கும் பா.ராஞ்சித்துக்கும் பாராட்டுக்ள் குவிந்து வருகின்றன.