கடந்த ஆண்டு தமிழ் திரையுலகில் பல நல்ல திரைப்படங்கள் வெளியாகின. பரியேறும் பெருமாள், 96, பேரன்பு போன்ற படங்கள் விருதுக்குரிய படங்களாக கருதப்பட்டன. ஆனால் மத்திய அரசு அறிவித்த விருதுப் பட்டியலில் ஒரு தமிழ் சினிமா கூட இடம்பெறவில்லை. இது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒருசிலர்  தமிழ் திரையுலகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில்  இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதியக் கொடுமையை பற்றி ஆழமாக பேசியிருந்த இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது

இந்நிலையில், புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. வரும் 13ஆம் தேதி நடக்க இருக்கும் விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி இயக்குநர் மாரி செல்வராஜூக்கு இவ்விருதை வழங்க இருக்கிறார்.