அரசு மருத்துவமனையில் பரவை முனியம்மா... ஆதரிக்க ஆள் இல்லாமல் தவிப்பு..
நடிகர் விக்ரம் நடித்து வெளியான 'தூள்' படத்தையே தூக்கி நிறுத்திய பாடல் 'ஏ சிங்கம்போல நடந்து வரான் எங்க பேராண்டி' என்று தொடங்கும் பாடல். அந்த படத்தில் நடித்தது மட்டும் இன்றி தன்னுடைய கம்பீர குரலால் பாடலுக்கும் உயிர் கொடுத்தவர் பரவை முனியம்மா.
இந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், சமையல் நிகழ்ச்சி, வெளிநாடுகளுக்கு சென்று பாடல்கள் பாடியும் மிகவும் பிரபலமானார்.
ஆனால், தற்போது இவருடைய நிலையோ மிகவும் கொடுமையாக உள்ளது. வயதான காலத்தில் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே இவர் மருத்துவமனையில் இருந்தபோது, நடிகர் சிவகார்த்திகேயன் இவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து பத்தாயிரம் ரூபாய் பண உதவி செய்ததோடு மட்டும் இல்லாமல் மருத்துவ செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்.
இதே போல் விஷால் இவருக்கு ஐந்தாயிரம் உதவி தொகை வழங்கினார். நடிகர் தனுஷ், பரவை முனியம்மாவுடன் வேங்கை படத்தில் நடித்திருந்தால். இந்த அன்பின் காரணமாக நடிகர் தனுஷ் இவருக்கு ஐந்து லட்சம் பண உதவி செய்தார். மேலும் மறைத்த முதலமைச்சர் ஜெயலலிதா இவரை பற்றி அறிந்து மாதம் 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் பரவை முனியம்மா மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில், வயது மூப்பு மற்றும் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இவர் மருத்துவ செலவிற்கு அவதிபட்டு வருவதை அறிந்த இளைஞர்கள் சிலர், இவரை நேரில் சந்தித்து பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.