கபாலி, காலா என தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய இளம் இயக்குனர் பா.ரஞ்சித், 18ஆம் நூற்றாண்டில் சமூக அநீதிக்கு எதிராக போராடிய தலைவர் பற்றிய படத்தை பாலிவுட்டில் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் பா.ரஞ்சித். இதை அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஒரு சுவரை மட்டும் மையமாக வைத்துக் கொண்டு ஜாதி அரசியலை மிகவும் அற்புதமாக பேசியிருப்பார் பா.ரஞ்சித். இந்தப் படத்திற்குப் பின்னர், அவர் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். 

இதை அடுத்து கோவா படத்தில் பணியாற்றிய போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் சவுந்தர்யா உடனான பழக்கத்தின் மூலமாக சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரஞ்சித், கபாலி என்ற படத்தை இயக்கினார்.   இதை அடுத்து, ரஜினியை இயக்கும் ஜாக்பாட் மீண்டும் ரஞ்சித்திடமே சென்றது. இந்த முறை அவர் காலா என்ற கமர்ஷியல் படத்தைக் கொடுத்து, வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். 

பிறகு தயாரிப்பாளராகவும் மாறிய ரஞ்சித், பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்து வெற்றி கண்டார், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  காலாவிற்கு பிறகு ரஞ்சித் இயக்கப் போகும் படம் , என்ன, நடிகர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வண்ணம் இருந்தது, இளையதளபதி விஜயை இவர் இயக்கவுள்ளதாகவும் முதலில் கூறப்பட்டது, 

இந்த நிலையில், பா. ரஞ்சித் பாலிவுட்டில் கால் பதிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் சமூக அநீதிக்கு எதிராகப் போராடிய தலைவரைப் பற்றிய படத்தை இந்தியில் ரஞ்சித் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரமாண்ட பொருட் செலவில் படம் உருவாகவுள்ளதாகவும்,  திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் இதில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.