மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், ட்விட்டரில் தனக்கென அதிகாரப்பூர்வ கணக்கு ஒன்றை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் பிரியா சங்கர். புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்த இவர் பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். இதை அடுத்து திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நடிகர் வைபவுடன் இணைந்து மேயாத மான் என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார்.

  

கடந்த ஆண்டு வெளியான மேயாத மான் பெரிய அளவிலான படங்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பிரியா பவானி சங்கரின் கதாப்பாத்திரமும் பேசப்பட்டது. இதை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் என்ற படத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் சிறப்பாகவே சென்று கொண்டிருந்த நிலையில், போலி ட்விட்டர் கணக்குகள் மூலம் இவருக்கு சோதனை ஏற்பட்டது, இவரது பெயரில் பல்வேறு நபர்கள் போலி பெயரில் ட்விட்டர் கணக்குகளை தொடங்கியுள்ளனர் .அது மட்டும் அல்லாமல் நடிகை பதிவிடுவது போல் அவ்வப்போது எதையாவது பதிவிட்டு பரபரப்பை எற்படுத்தி வருகின்றனர். 

இதனால் ஒரு முடிவுக்கு வந்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், சொந்தமாக ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள கணக்கில், இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் வணக்கம் என்று கூறியபடி தனது பேச்சை தொடங்குகிறார் பிரியா பவானி சங்கர்.  @priya_Bshankar என்பது தான் தமது உண்மையான ட்விட்டர் கணக்கு என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். தமது பெயரில் ட்விட்டரில் எக்கச்சக்கமாக போலி கணக்குகள் உள்ளது தனக்கு தெரிய வந்ததாகவும், இதனால் குழப்பத்தை தவிர்க்கவே இந்த கணக்கை தொடங்கி உள்ளதாகவும் நடிகை கூறியிருக்கிறார்.

 

கணக்கு தன்னுடையது தான் என்பதை சரிசெய்து உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். போலிக் கணக்குகளால் ஏற்பட்ட சிரமங்களுக்காக ரசிகர்களின் அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ளார். பிரச்சனைகள் விரைவில் சரியாகும் என்று நம்புவதாகக் கூறியுள்ள பிரியா பவானி சங்கர், இதைப் புரிந்து கொண்டதற்காகவும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.