புஷ்பா பட வெற்றியில் திளைத்து வரும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பாலிவுட்டிலிருந்து எக்கச்சக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்..  

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்த படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) லாரி டிரைவராகவும், செம்மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் மாஸ் காட்டி இருந்தார். இதுதவிர அனசுயா, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது நடிகை சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் தான். இந்த பாடலுக்காகவே படம் பார்த்தவர்கள் ஏராளம்.

இரண்டு பாகங்களாக தயாராகி உள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த டிசம்பர் 17-ந் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. இப்படம் உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இப்படம் இந்தியில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. அதன்படி இதன் இந்தி டப்பிங் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பிறமொழி படம் ஒன்று இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரூ.100 கோடி வசூலை எட்டுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் முதல்பாகம் இந்தியில் ரூ.117 கோடி வசூலித்தது. 

இதற்கிடையே தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது..இது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில்..,

“புஷ்பா – தி ரைஸ் என் இசை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இசையில் எனது புதிய அணுகுமுறையை நம்பியதற்காக சுகுமார் சார், ஐகான்ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் நடிகர்களின் மாயாஜால திரை ஆளுமை எல்லாம் தான் இந்த வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது. எனது இசைக்காக அன்பையும் ஆசீர்வாதத்தையும் என் மீது பொழிந்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி, எனது வாழ்க்கை முழுவதும் உங்களிடமிருந்து இதே அளவு ஆதரவைப் பெறுவேன் என்று நம்புகிறேன் என்றார்.

அதோடு தற்போது தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பாலிவுட்டில் உள்ள பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. டிஎஸ்பி ஏற்கனவே தமிழ், தெலுங்கு, பாலிவுட் மற்றும் சில தனி ஆல்பம் சிங்கிள்களில் மிகவும் பிஸியாக இயங்கிகொண்டிருக்கிறார்.