நார்த் இந்தியாவுக்கு போய் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பெயரெடுத்தாலும், தமிழை ஒரு நாளும்  மறக்க மாட்டேன் என்றும், நான் ஒரு தமிழச்சி என்றும் நடிகை ஸ்ரீதேவி குறிப்பிட்டது நெஞ்சை நெகிழ வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த மீனம்பட்டியில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி, தனது 4 வயதில் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மூன்றுமுடிச்சு திரைப்படத்தில் முதன் முதலாக அவர் கதாநாயகியாக நடித்தார். கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த ஸ்ரீதேவி பின்னர் தெலுங்கு படங்களிலும் தோற்றமளித்தார்.

அவரது கலைப்பயணத்தின் உச்சகட்டமாக ஹிந்தி திரையுலகிலும் நுழைந்தார். அங்கு அவர் நடித்த படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார்.

பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி, 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். விஜய் கதாநாயகனாக நடித்த புலி என்ற தமிழ்படத்திலும் ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு, அவர் நடித்த மாம் திரைப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சிக்காக, சென்னை வந்திருந்தார். அப்போது ஸ்ரீதேவியிடம், தமிழ்நாட்டை விட்டு போய் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, தமிழ் ஞாபகம் இருக்கிறதா ? அல்லது மறந்து விட்டதாக என கேள்வி  எழுப்பினார்.

அவருக்கு பதிலளித்த ஸ்ரீதேவி, நான் பிறந்தது , வளர்ந்தது  எல்லாம் தமிழ்நாட்டில்தான், நானும் தமிழ்தான்..எப்படி என்னால் தமிழை மறக்க முடியும் என உருக்கமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தாய்தான் உலகிலேயே சிறந்தவர் என்றும், ஒவ்வொருவருக்கும் தாய் ஒரு முக்கியமானவர் என்றும் அவர் கூறினார். தமிழ் மீது மிகுந்த பற்று கொண்ட நடிகை தேவி  திடீரென  மரணித்திருப்பது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் இழப்பு.