கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் நடித்தனர். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில்,ரஜினிகாந்த்,  சிம்ரன், திரிஷா, நடிகர்கள் பாபி சிம்ஹா,சசிகுமார்,சமுத்திரகனி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

பேட்ட படத்தின் பாடல்களை ரசிகர்களே மொபைல் போன்கள் மூலம் வெளியிட்டனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளரும் , சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதிமாறன், வாரணாசியில் பல நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. ஆனால்  நடிகர் ரஜினிகாந்த் அங்கெல்லாம் தங்காமல் சாதாரண ஹோட்டலில் தங்கினார் என பாராட்டுத் தெரிவித்தார்.

 

படத்தின் பட்ஜெட் குறித்து தயாரிப்பு நிர்வாகியிடம் அடிக்கடி கேட்டு, செலவுகள் பற்றி ரஜினி கேட்டறிந்துள்ளார். பட்ஜெட் எந்தவிதத்திலும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வந்து விடக்கூடாது என்பதில் ரஜினி மிக கவனமாக இருந்தார். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்கள் மீது அவர் அக்கறை கொண்டவர் என கலாநிதி குறிப்பிட்டார்..

சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி மட்டும் தான். இனி அந்த இடத்துக்கு யாரும் வரமுடியாது என்று கூறிய கலாநிதி மாறன் , தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்தியத் திரையுலகிலேயே நடிகர் ரஜினிகாந்த் போன்று வேறு எந்த நடிகரும் பொறக்கவே முடியாது என ஆவேசமாக பேசினார்.