மாஸ்டர் திரைப்படத்தை இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் படத்தை குறித்த தேதியில் ரிலீஸ் செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று படம் திரைக்கு வராத நிலையிலும் #MASTERFDFS என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் விஜய்யின் தீவிர ரசிகர்கள். இதுஒருபுறமிருக்க திரையரங்க உரிமையாளர்களும் இன்று மாஸ்டர் திரைக்கு வந்திருந்தால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டிருக்கும் என்று சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறி ட்வீட் செய்துள்ளது. இதுகுறித்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நீங்கள் எப்படி எங்களை காணமுடியாமல் வருந்துகிறீர்களோ? அதேபோல, நாங்கள் உங்களை காணமுடியாமல் வருந்துகிறோம்..

ஆய்வாளர்கள் மாற்று மருந்து கண்டுபிடித்து கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவார்கள் என்று நம்புகிறோம்..நாங்கள், மிகவும் வலுவாக மீண்டும் வருவோம் நண்பா..வீட்டில் இருங்கள்.பாதுகாப்பாக இருங்கள்.ஊரடங்கு உங்களது உத்வேகத்தை இழக்கச் செய்யக்கூடாது. மாஸ்டர் விரைவில் உங்களைச் சந்திப்பார்.” என்று தெரிவித்துள்ளது.

இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள நித்யானந்தா, தனது பி.எம்.ஓ கைலாஷ் பக்கத்தில், ‘’மாஸ்டர் டிரெய்லர் லாம் இருக்கட்டும். தம்பி விஜய் கிட்ட இப்போ கேக்க வேண்டியது கரோனாவுக்கு எவ்வளவு நிதி எப்போ கொடுக்க போறாரு. ஊரே கஷ்டத்துல இருக்கும்போது கை தட்ட கூடாது, விளக்கு ஏத்த கூடாது ஆனா டிரெய்லர் மட்டும் வேணும். கொஞ்சம் காசும் கொடுக்க சொல்லுங்க தங்கதமிழன் கிட்ட’’ என விஜய் கொரோனா நிதி வழங்காததை சுட்டிக்காட்டி பதிவொன்றை போட்டுள்ளார்.