’செல்வராகவனோட படங்களைச் சரியா புரிஞ்சிக்கிறதுக்குப் பத்துப் பதினஞ்சி வருஷம் ஆகும்னா அடுத்த அவரோட படத்த தயவு செஞ்சி இன்னும் 15 வருஷங்கள் கழிச்சே எடுக்கச் சொல்லுங்க’என்று ‘என்.ஜி.கே’ படம் குறித்து கதறி அழுகிறார்கள் சூர்யா ரசிகர்கள். இன்னொரு பக்கம் இப்படத்துடன் சேர்ந்து ரிலீஸாகியிருக்கும் பிரபு தேவா, இயக்குநர் எல்.விஜய்யின் ‘தேவி 2’படமும் படு தோல்விப்படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

திராவிட அரசியலை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று செல்வராகவன் கடந்த ஒன்றரை வருடங்களாக எடுத்து எடுத்து எடுத்துக்கொண்டிருந்த ‘என்.ஜி.கே படம் ரசிகர்களைப் படுத்து படுத்து என்று படுத்தி எடுத்திருக்கும் நிலையில் நேற்றே பல முக்கிய நகரங்களில் கூட தியேட்டர்கள் காலியாகின. படத்தின் பட்ஜெட்டில் பத்து சதவிகிதம் கூட வசூலாகாது என்கிறது தியேட்டர் வட்டாரங்களின் ரிப்போர்ட்.

இப்படத்துடன் நேற்று ரிலீஸான பிரபு தேவா, தமன்னா ஜோடியினரின் ‘தேவி 2’ என்கிற பேய்ப்படம் ரசிகர்களை வாட்டி வதைத்திருக்கிறது.  முதல் பார்ட்டில் தமன்னா பேயாக வந்த நிலையில் இப்படத்தில் பிரபுதேவா சொந்தக் கேரக்டரில் அடுத்து டபுள் ஆக்ட் பேயாகவும் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

மொரியஸ் தீவில் நடக்கும் இக்கதையில் தனது காதலிகளிடமிருந்து தன்னைப்பிரித்த வில்லனை க்ளைமாக்ஸில் சாதா பிரபுதேவாவும் பேய் பிரதர்ஸ் பிரபுதேவாக்களும் எப்படி பழிவாங்கினார்கள் என்று போகிறது கதை. இயக்குநர் ஏ.எல்.விஜய் கிரியேட்டிவிட்டி என்றால் கிலோ எத்தனை ரூபாய் என்று படம் முழுக்கவே கேட்குமளவுக்கு அவ்வளவு சொதப்பலாய் இயக்கியிருக்கிறார். அதிலும் கோவை சரளாவின் ஓவர் ஆக்டிங், தியேட்டரின் சீட்டின் மேல் ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்று யோசிக்கும் அளவுக்கு தாங்க முடியாததாய் இருக்கிறது.