தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. மேடையில் மைக் கிடைத்தாலே அரசியல் பஞ்சாயத்துகள் வெடிக்குமளவுக்கு ஏதாவது பேசி வைப்பது ரஜினியின் வழக்கம். அதிலும் அவரது புதுப்படம் ரிலீஸாகிறது என்றால் வஞ்சனையே இல்லாமல் யாரையாவது வெச்சு செஞ்சு, விவகாரத்தை கிளப்பிவிடுவார். 
அதிலும் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், ரஜினி அரசியலுக்கு வர உள்ள நிலையில், இன்னும் கட்சியை துவக்கிடாத நிலையி, ‘தேவைப்பட்டால் கமலும் நானும் இணைந்து அரசியல் செய்வோம்’ என்று அவர் சொல்லிவிட்ட நிலையில், தேசமே அவரது அரசியல் எண்ட்ரியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால் மனுஷன் ‘நிறைய விமர்சனம் செய்திருந்தாலும், அதை மனதில் வைத்துக் கொள்ளாமல், இந்த அரங்கத்தைக் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி!’ என்று எடப்பாடியாருக்கு ஐஸ் வைத்தார் பேச்சில். அப்போதே பாதி சுதி குறைந்துவிட்டது. அடுத்து ஸ்டாலினையாவது வம்பிழுப்பார் என்று நினைத்தால், அதுவும் நடக்கவில்லை. ஆனால்  வேறு வகையில் விமர்சன வாய்களுக்கு தீனி ஆகியிருக்கிறார் ரஜினி. அதாவது “ நான் ‘ரமணா’ படத்தை பார்த்தபோதே முருகதாஸை எனக்கு பிடித்துவிட்டது. கஜினி திரைப்படம் வெளியானதும், நானும் அவரும் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போய்விட்டது.” அடுத்து....”எனக்கு வயதாகிவிட்டது, என்பதால் இனி டூயட் பாடல்கள் வேண்டாம்! என்று முடிவு செய்தேன். அதனால்தான் கபாலி, காலா போன்ற படங்களில் நடிக்க தொடங்கினேன்.” என்றார். 


இதைப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசியல் விமர்சகர்கள்....”ரஜினி எவ்வ்ளவு நல்லவர்! சக நடிகைகளை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, இதர பணிகள் செய்து ஆடும் ‘டூயட்’டை வெறுத்திருக்கிறார். அதுவும் எந்த வயதிலேயே பாருங்கள், அறுபத்தியாறு வயதிலேயே அதை வெறுத்துவிட்டார். ஆம், எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் கூட அவர் எமி ஜாக்சனுடன் கட்டிப்பிடித்து ஆடியிருப்பார். அது நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளிருக்கும். அந்த வகையில் பார்க்கப்போனால், அறுபத்து ஆறு வயது வாக்கில் அவருக்கு வெறுத்திருக்கிறது டூயட். மூன்று பேரக்குழந்தைகள் எடுத்து, அதில் மூத்த பெண்ணின் மூத்த மகன் தன் இடுப்பையும் தாண்டி வளர்ந்துவிட்ட நிலையில் ஒரு வழியாக தாத்தாவுக்கு....ஸாரி தலைவருக்கு தன் பேத்தி வயது நடிகைகளுடன் டூயட் பாடிட, ஆடிட வெறுத்திருக்கிறது. 


இப்பேர்ப்பட்ட மகான் அல்லவா நம்மை ஆள்வதற்காக அரசியலுக்குள் நுழைகிறார்! சினிமாவில் அவரை சலிக்க சலிக்க கொண்டாடிய நாம், இனி அரசியலிலும் கொண்டாடித் தீர்ப்போம். எவ்வளவு லக்கி நாம!” என்று வகுந்தெடுத்திருக்கின்றனர் ரஜினியை. ஹெள இஸ் இட்?!